/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடை காக்க! சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்: உடுமலையில் 36 கிராமங்களில் நடக்கிறது
/
கால்நடை காக்க! சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்: உடுமலையில் 36 கிராமங்களில் நடக்கிறது
கால்நடை காக்க! சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்: உடுமலையில் 36 கிராமங்களில் நடக்கிறது
கால்நடை காக்க! சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்: உடுமலையில் 36 கிராமங்களில் நடக்கிறது
ADDED : டிச 10, 2025 08:59 AM

உடுமலை: உடுமலை கோட்ட கால்நடைத்துறை சார்பில், கால்நடைகளுக்கு நோய் பாதிப்புகளை தடுக்கும் வகையில், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடந்து வருகிறது. இதுவரை, 42 ஆயிரம் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
உடுமலை பகுதிகளில் பால் உற்பத்திக்காக, ஏறத்தாழ, 69 ஆயிரம் மாடுகள், 900 எருமைகள், 50 ஆயிரம் வெள்ளாடுகள், 16 ஆயிரம் செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.
மேலும், 653 கோழிப்பண்ணைகள் வாயிலாக, கறிக்கோழி, முட்டைக்கோழி, நாட்டுக்கோழி என88 லட்சம் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
3 ஆயிரம் வாத்துக்கள், ஆயிரம் காடை, அதோடு, 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய், குதிரை, 112 செல்லப்பிராணிகளும் வளர்க்கப்படுகின்றன.
கால்நடைத்துறை
உடுமலை கோட்டத்தில், உடுமலை நகரம், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்தில், 18 கால்நடை கிளை நிலையங்கள், 22 கால்நடை மருந்தகங்கள், ஒரு கால்நடை மருத்துவமனை மற்றும் உடுமலை பஸ் ஸ்டாண் எதிரே, 24 மணி நேரமும் செயல்படும் கால்நடை பன்முக மருத்துவமனை செயல்படுகிறது. மேலும், கால்நடை ஆம்புலன்ஸ் திட்டமும் நடைமுறையில் உள்ளது.
கால்நடைத்துறை சார்பில், கால்நடைகளை பாதிக்கும் கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கையாக, ஆண்டுக்கு இருமுறை, கடந்த, 2022 முதல் 2025 ஜூலை வரை, ஏழு சுற்றுக்களிலும், உடுமலை பகுதியிலுள்ள, 63 ஆயிரம் மாடுகள் மற்றும் நான்கு மாதம் வயதுடைய கன்றுகள் மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் தோல் கழலை நோய் எனப்படும் பெரியம்மை நோய் பாதிப்பிலிருந்து மாடுகளை காக்கும் வகையில், கடந்தாண்டு, 56 ஆயிரத்து 900 மாடுகளுக்கும், நடப்பாண்டு, 44 ஆயிரத்து, 200 மாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதே போல், கன்று வீச்சு நோய் பாதிப்பு ஏற்படாதவாறு, ஆண்டுக்கு ஒரு முறை, சராசரியாக 16 ஆயிரம் கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
வெள்ளாடுகளுக்கு, ஆட்கொல்லி நோய் எனப்படும் பி.பி.ஆர்.,நோய் பாதிப்பிலிருந்து தடுக்கும் வகையில், ஆண்டுக்கு ஒரு முறை என, கடந்த இரு ஆண்டுகளாக, 90 ஆயிரம் ஆடுகளுக்கு, சிறப்பு முகாம்கள் வாயிலாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
முகாம் இலக்கு
தற்போது, கோமாரி நோய் தடுப்பூசி முகாம், 8-வது சுற்று, நடப்பு மாதம் துவங்கி, கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், தமிழக அரசின் சிறப்பு திட்டமான சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஊராட்சிகளில், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், 12 முகாம்கள் என்ற அடிப்படையில், உடுமலை கோட்டத்திற்கு 36 முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
நேற்று வரை, 27 முகாம்கள் நடத்தப்பட்டு, 16 ஆயிரத்து, 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சைகளும், 6,337 கால்நடைகளுக்கு தடுப்பூசிகளும், 4,847 கோழிகளுக்கு கோழி கழிச்சலுக்கான தடுப்பூசிகளும், 13 ஆயிரத்து 105 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் 1,253 என, 42,042 கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு முகாம்களிலும், சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகளும், சிறந்த பண்ணை பராமரிப்பு முறை மற்றும் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.
மருந்துகள் இருப்பு
உடுமலை கோட்ட கால்நடைத்துறை உதவி இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது: கால்நடைத்துறை சார்பில், கிராமங்கள் தோறும், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இம்முகாம்களில், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு, அனைத்து வகையான நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடுமலை கோட்டத்தில், தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய் கிளர்ச்சி ஏதும் ஏற்படாமல், தொற்று நோய் தாக்குதலிலிருந்து கால்நடைகள் பாதுகாக்கப்பட்டு, ஒரு கால்நடை இறப்பு கூட இல்லை என்ற நிலை எட்டப்பட்டுள்ளது.
மேலும் பருவ மழை காலங்களில் கால்நடை வளர்ப்பில் ஏற்படும் பாதிப்புகளுக்கு, கால்நடை மருந்தகங்களில் தேவையான மருந்துகள் இருப்பு உள்ளது.
இவ்வாறு, தெரிவித்தார்.

