ADDED : செப் 18, 2026 08:13 PM
பல்லடம், செப். 19-–
இச்சிப்பட்டி கிராம ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அரசு அலுவலகங்களில் பொது தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலரின் முகவரி பலகை வைக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு ஒப்புகை வழங்குவதுடன், மனுக்களுக்கான காலக்கெடு, இணைக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் கட்டண விவரங்கள் அடங்கிய பட்டியலையும் அலுவலகங்களில் வைக்க வேண்டும்.
புகார் மனு அளிக்கப்படும் நிலையில், அதன் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து, மனு அளித்தவர் மற்றும் எதிர்தரப்பினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளின் சம்பளத்தை ஏன் கருவூலத்தில் சேர்க்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். நில வகைப்பாடு மாற்றம் செய்யும்போது, அது குறித்து சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் மூலம் முன்கூட்டியே தெரிவித்து, சட்டம்-–ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் சுமுகமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அரசு அதிகாரிகள் அலுவல் நேரத்தில் கூட்டங்களில் பங்கேற்க அலுவலகத்தை விட்டு வெளியே செல்லும்போது, அதுகுறித்த தகவலை கையெழுத்திட்டு அலுவலகத்தில் ஒட்ட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த கிராமங்களில் வசிக்கிறார்களா என்பதையும் உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடமையை முறையாக செய்யாத அரசு அதிகாரிகளை கண்டித்தும், வரும் 21ம் தேதி இச்சிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன் அமைதி வழியில் தர்ணா போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
