/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பத்திரப்பதிவு தடைக்கு எதிராக போராட்டம்
/
பத்திரப்பதிவு தடைக்கு எதிராக போராட்டம்
ADDED : ஏப் 18, 2025 06:52 AM

திருப்பூர்; நிலங்களை பூஜ்ஜிய மதிப்பு செய்து, பத்திரப்பதிவுக்கு தடை ஏற்படுத்திவரும் ஹிந்து அறநிலையத்துறை, வக்ப் வாரிய நடவடிக்கைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவில் அருகேயுள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் பேசியதாவது:
அறநிலையத்துறை, வக்ப் வாரியம், சர்ச் இடங்களில் குடியிருப்போர், சிறுகடை வைத்துள்ளோர், விவசாய நிலங்கள் பல தலைமுறையாக உள்ளவர்களை வெளியேற்றுவதற்காக பல உத்தரவுகள் போடப்பட்டுள்ளன.
பல தலைமுறைகளாக கோவில் இடங்களில் குடியிருப்போர், சாகுபடி செய்யும் விவசாயிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாகவும் மற்றவர்களுக்கு நியாயமான விலைக்கு கிரயம் செய்து பட்டா வழங்க வேண்டும்.
அடிமனை நீங்கலாக பயனாளிகள் கட்டிய மேல் கட்டுமானங்களை, சட்டப்படி வாங்கவும், விற்பனை செய்ய, பதிவு செய்ய அனுமதிக்கவேண்டும். விவசாயிகளின் குத்தகை உரிமையை பறித்து மறு ஏலம் விடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பயனாளிகள், குடியிருப்பு வாசிகள் கிரயம் பெற்று அனுபவித்துவரும் நிலங்களை பூஜ்ஜிய மதிப்பு செய்து, பத்திர பதிவுக்கு தடை ஏற்படுத்திவரும் நடவடிக்கையை திரும்பப்பெறவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் குமார், அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் உட்பட விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.