/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமெரிக்க குளிர்பானங்களை தரையில் கொட்டி போராட்டம்
/
அமெரிக்க குளிர்பானங்களை தரையில் கொட்டி போராட்டம்
ADDED : செப் 05, 2025 10:57 PM

பல்லடம்: அமெரிக்க தயாரிப்பு குளிர்பானங்களை ரோட்டில் கொட்டிய விவசாயிகள், வணிகர்கள், 'இந்தியாவை எதிர்த்தால், அமெரிக்காவில் தொழில்கள் காணாமல் போகும்' என எச்சரித்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், வ.உ.சி., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், பங்கேற்றவர்கள், பெப்சி, கோலா ஆகிய வெளிநாட்டு குளிர்பானங்களை ரோட்டில் கொட்டி, அமெரிக்க வரிவிதிப்புக்கு எதிராக, கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில ஊடகப்பிரிவு தலைவர் ஈஸ்வரன் பேசியதாவது:
விவசாய விளைபொருட்களை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தும் அமெரிக்கா, இந்தியாவுக்கு, 50 சதவீத வரி விதித்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி, விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் செயலை ஒருபோதும் செய்ய மாட்டேன் என உறுதியாக இருந்ததால், இன்று, நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவரும் நிம்மதியுடன் உள்ளோம். விவசாயிகள் மற்றும் நாட்டு மக்களுக்காக உறுதியாக உள்ள ஒரு பிரதமருடன் நாம் கரம் கோர்த்து வலு சேர்க்க வேண்டியது அவசியம்.ஒரு நாடு நம்மை எதிர்க்குமானால், 50 நாடுகளுடன் கூட்டு சேர்ந்து, இந்தியாவை வளப்படுத்தும் முயற்சியில் பிரதமர் இறங்கியுள்ளார். இந்தியாவை எதிர்த்தால் அமெரிக்க சந்தை காணாமல் போகும் என்பதுதான் யதார்த்த நிலை. பிரதமர் மேற்கொண்டுள்ள முயற்சியால், இந்தியா நிச்சயமாக வல்லரசு நாடாகும். அமெரிக்காவை நாம் தைரியமாக எதிர்க்கிறோம் என்றால், அதற்கு, வ.உ.சி., போன்றவர்கள் செய்த தியாகமே காரணம். எந்த நோக்கத்துக்காக வ.உ.சி., போராடினாரோ அதனை நிறைவேற்றும் நோக்கில் இன்று சுதேசி இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள், அமெரிக்க குளிர்பானங்கள் மட்டுமன்றி, அனைத்து அன்னிய உற்பத்தி பொருட்களையும் தவிர்க்க வேண்டும். இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்யும் இளநீர், நுங்கு, தயிர், மோர், கரும்பு சாறு, பதநீர், பழரசங்கள், கம்மங்கூழ் ஆகியவற்றை பயன்படுத்தி, சுதேசி இயக்கத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்.
ஏற்கனவே, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டதால், அன்னிய நாட்டின் குளிர்பானங்கள் விற்பனை குறைந்தது. அதேபோல், ஒட்டுமொத்த நாட்டு மக்களும், அன்னிய குளிர்பானங்களை தவிர்த்து, வ.உ.சி.,யின் கனவை நினைவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.