/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாடியில் செயல்படும் சுகாதார நிலையம் இடம் மாற்றாவிட்டால் போராட்டம்! கவுன்சிலர் ஆவேசம்
/
மாடியில் செயல்படும் சுகாதார நிலையம் இடம் மாற்றாவிட்டால் போராட்டம்! கவுன்சிலர் ஆவேசம்
மாடியில் செயல்படும் சுகாதார நிலையம் இடம் மாற்றாவிட்டால் போராட்டம்! கவுன்சிலர் ஆவேசம்
மாடியில் செயல்படும் சுகாதார நிலையம் இடம் மாற்றாவிட்டால் போராட்டம்! கவுன்சிலர் ஆவேசம்
ADDED : பிப் 05, 2024 12:57 AM
உடுமலை:உடுமலை அருகே, முதல் மாடியில் இயங்கி வரும் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றாவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என ஒன்றிய குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
உடுமலை ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், 25வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தங்கமணி (தி.மு.க.,) பேசியதாவது:
உடுமலை, எலையமுத்துாரில், அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. கட்டடம் பழுதடைந்த நிலையில், அதனை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள், அதே ஊரில், துணை சுகாதார நிலையத்தை அமைக்காமல், ஒரு கி.மீ.,துாரம் உள்ள ஆண்டியகவுண்டனுார் கிராமத்தில், முதல் மாடியில் அமைத்துள்ளனர்.
எலையமுத்துாரிலேயே, மாற்று கட்டடம் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், துணை சுகாதார நிலையம் மாற்றப்பட்டுள்ளதால், போதிய போக்குவரத்து வசதியில்லாமல் நடந்து செல்ல வேண்டிய நிலையும், கர்ப்பிணிகள், முதியர்கள் சிகிச்சை பெற, மாடி படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
சுகாதார நிலையத்திற்கு, டாக்டர்கள், செவிலியர்களும் முறையாக வருவதில்லை. எனவே, உள்ளூரிலேயே செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக மாற்றாவிட்டால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
எலையமுத்துார் ஊராட்சி பகுதியிலுள்ள பன்றி பண்ணைகளை அகற்ற வேண்டும். பார்த்தசாரதிபுரத்தில் மின் கம்பங்கள், கம்பிகளை மாற்ற மனு அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. ஏ.டி.,காலனியில், 20 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்துள்ளன. உடனடியாக சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு, கவுன்சிலர் பேசினர்.
அதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள், 'வாடகை பிரச்னை உள்ளது. செவிலியர் விரும்பிய இடத்தில், துணை சுகாதார நிலையத்தை அமைத்துக்கொள்ளலாம். மாற்றம் செய்ய வேண்டுமானால், உரிய கடிதம் வழங்குங்கள்,' என, பதில் அளித்தனர்.
ஒன்றிய அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளிப்பதாக கூறி, கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

