/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை கால்நடைகளுடன் காத்திருப்பு போராட்டம்
/
நாளை கால்நடைகளுடன் காத்திருப்பு போராட்டம்
ADDED : அக் 30, 2025 12:48 AM

பல்லடம்:  திருப்பூர் அருகே, இடுவாய் கிராமத்தில் குப்பைகளை தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆரம்பகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இடுவாய் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  நேற்று முன்தினம், இடுவாய் மற்றும் கரைப்புதுார், ஆறுமுத்தாம்பாளையம், வேலம்பாளையம் ஊராட்சிகளில், மாநகராட்சியை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
நேற்று, வேலம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், பொதுமக்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், தொழில்துறையினர், விவசாய சங்க நிர்வாகிகள்  மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
இடுவாய் கிராமத்தில் குப்பை கொட்டுவது என்பது இந்த கிராமத்தை மட்டும் பாதிக்காது. சுற்றுவட்டாரத்தில், ஏறத்தாழ, 10 கி.மீ. சுற்றளவுக்கு  மேல் விவசாயம் பாதிக்கும். கால்நடைகள் உட்பட மனிதர்களும் இதனால் பாதிப்புக்குள்ளாவார்கள்.
எனவே, மாநகராட்சியினர் குப்பை கொட்ட நினைப்பதை தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
காரணம், இது நமக்கானது மட்டுமல்ல; நமது எதிர்கால சந்ததிக்கானது.  இவ்வளவு எதிர்ப்புக்கு பின்பும், மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்ட துடிக்கிறது.
போராட்டம் எந்த அரசியல் கட்சியோ இயக்கமோ சார்ந்தது அல்ல. முழுக்க முழுக்க நமது கிராமத்தை காக்க வேண்டும் என்பதற்காக நடத்துகிறோம்.
மாநகராட்சியா, மக்களின் சக்தியா என்பதை பார்த்து விடுவோம். சட்ட ரீதியான போராட்டத்துக்காக கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்த்திலேயே குப்பை பிரச்னைக்கு முடிவு கட்டியாக வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாளை (அக்., 31) காலை, 9:00 முதல் மாலை 6:00 மணி வரை சின்னக்காளிபாளையம் பகுதியில், கால்நடைகளுடன் வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது
என்று தீர்மானிக்கப்பட்டது.

