தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பெருமைமிகு மாணவர்கள்

பெருமைமிகு மாணவர்கள்

பெருமைமிகு மாணவர்கள்


ADDED : செப் 04, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மறக்க முடியாதவர்

மகாலிங்கம், பல்லடம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்:

எத்தனையோ மாணவர்கள் நம்மிடம் படித்தாலும், ஒரு சிலரை மட்டும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. அவ்வகையில், என்னிடம் பிளஸ் 2 படித்த ஆனந்தகுமார் என்றும் நினைவில் நிற்கும் மாணவர்.

மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர். எளிமையும் நேர்மையும் அவரது தனிச்சிறப்புகள். தற்போது ஊரக வளர்ச்சித் துறை பயிற்சி இயக்குனராக உள்ளார். தான் இந்த நிலைக்கு உயர்வதற்குக் காரணம் ஆசிரியர்கள்தான் என்று அடிக்கடி கூறுவார்.

சமீபத்தில் குடும்பத்துடன் பல்லடம் வந்து என்னைச் சந்தித்தபோதும், ஆசிரியர் மீதான அதே மரியாதையுடன் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக உயர் பொறுப்பில் இருந்தாலும், ஆசிரியரை மதிக்க வேண்டும் என்ற பண்பை அவர் விட்டுவிடவில்லை. ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆனந்தகுமார் சிறந்த உதாரணம். அவரது நேர்மையான பணியும், ஆசிரியர் என்ற முறையில் எங்களுக்குப் பெருமை அளிக்கிறது.

---–––

ஆசிரியரின் பெருமை

ராஜா, உடற்கல்வி ஆசிரியர், வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிபாளையம்:

மைதானம் என்பது வெறும் விளையாட்டு இடமல்ல; மாணவர்களின் உடலையும் மனதையும் வடிவமைக்கும் இடம். ஆசிரியரின் பயிற்சி, மாணவனின் கனவை நனவாக்க வேண்டும்.

நான் சுப்பையா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியபோது,என்னிடம் பயிற்சி பெற்ற சய்யது முஹம்மது புஹாரி, பள்ளிக் காலத்தில் மாவட்டத்தின் சிறந்த வாலிபால் வீரராகவும், அணியின் கேப்டனாகவும் இருந்தார். இன்று மருத்துவ நிபுணராக உள்ளார்.

மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்தவுடன் என்னைச் சந்தித்து ஆசி பெற்றார். “எனது உடலுக்கும் மனதுக்கும் வலு சேர்த்த உங்களை மறக்கமாட்டேன்” என்றார். ஒரு ஆசிரியருக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?

இன்று ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் சிகிச்சை அளித்து வருகிறார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இலவச மருத்துவ முகாம்களும் நடத்துகிறார். அவரது மனிதநேய சேவையைப் பார்க்கும்போது ஆசிரியராக எனக்குப் பெருமையாக உள்ளது.

---

–––

சாதித்த சூரியன்

கவிதா, உடற்கல்வி ஆசிரியர், அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி:

அவிநாசியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குடும்பத்தின் மூத்த மகன் சூரிய பிரகாஷ். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலும், அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தார்.

மாணவர்களின் தனித்திறமையைக் கண்டறியும் ‘பேட்டரி டெஸ்ட்’ மூலம் குண்டெறிதலில் அவரது திறமை வெளிப்பட்டது. தொடர்ந்து பயிற்சி அளித்து, மாவட்ட மற்றும் தென் மாநிலப் போட்டிகளுக்குத் தயார்படுத்தினோம். மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் தங்கம் வென்று, தேசியப் போட்டிக்குத் தகுதி பெற்றார். தேசிய அளவிலும் தங்கம் வென்று சாதித்தார்.

ஆனால், தேசிய வீரருக்குத் தேவையான உணவு, உடை, பயிற்சி வசதிகள்கூட அவரது குடும்பச் சூழலால் கிடைக்கவில்லை. வறுமை அவரது திறமைக்குத் தடையாகிவிடக் கூடாது என்பதால், தன்னார்வ அமைப்புகள் மூலம் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுத்தோம்.

பின்னர் சென்னை லயோலா கல்லுாரியில் விளையாட்டு ஒதுக்கீட்டில் பட்டம் மற்றும் முதுகலைப் படிப்பை முடித்தார். தற்போது போபாலில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் தலைமை காவலராகப் பணியாற்றி வருகிறார்.

வறுமையை வென்று சாதிக்க முடியும் என்பதற்கு சூரிய பிரகாஷ் ஒரு சிறந்த உதாரணம்.

---

–––––

மனிதநேய மருத்துவர்

சிவகுமார், ஆசிரியர், பொங்கலுார்:

எனது மிகச் சிறந்த மாணவர்களில் ஒருவர் சரவணமூர்த்தி. பள்ளிப் பருவத்திலேயே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்; பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்பார்.

பின்னர் மருத்துவம் படித்து, இந்திய ராணுவத்தில் மருத்துவராகவும், சில காலம் அரசு மருத்துவராகவும் பணியாற்றினார். தற்போது பொங்கலுாரில் ‘கிளினிக்’ நடத்தி வருகிறார்.

மருத்துவமனை என்றால் 24 மணி நேரமும் நோயாளிகளுக்காகத் தயாராக இருக்க வேண்டும் என்பது அவரது கொள்கை. அதன்படியே கிளினிக் வளாகத்திலேயே தங்கி, எந்த நேரத்திலும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், ‘ஞானாலயம்’ என்ற பெயரில் 25 லட்சம் ரூபாய் செலவில் நுாலகம் அமைத்துள்ளார். வாட்ஸ்அப் மூலம் தேவையான புத்தகங்களைப் பதிவு செய்தால், நேரடியாகக் கொண்டு சேர்க்கும் வசதியும் உள்ளது.

ஒரு நல்ல மருத்துவராக மட்டுமல்லாமல், மனிதநேயமும் வாசிப்பு நேசமும் கொண்ட மனிதராக அவர் உருவாகியிருப்பது ஆசிரியர் என்ற முறையில் எனக்குப் பெருமை.

---––––

மீண்ட மாணவன்

தங்கராஜன், தனியார் டுடோரியல் கல்லுாரி முதல்வர்

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றதால், பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பிளஸ் 1 படிப்பையும் பாதியில் நிறுத்தினார்.

கடந்த 2001-ம் ஆண்டு எனது கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார். தொடர்ந்து வழிகாட்டியதில், பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். பின்னர் எம்.பி.ஏ., எல்.எல்.பி., படித்து, இன்று வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் சங்க ஆலோசகராகவும் உள்ளார். சொந்தமாக ஆடை உற்பத்தி நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இன்றும் எங்கள் குடும்ப நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்கிறார். என்னிடம் படித்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்த ஏராளமான மாணவர்களில் அவரும் ஒருவர்.

தன்னிடம் படித்த மாணவன் வாழ்க்கையில் நல்ல நிலையை எட்டியிருக்கிறான் என்பதே ஒரு ஆசிரியருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய கவுரவம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us