/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம குளங்களுக்கு தண்ணீர் கொடுங்க! மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்
/
கிராம குளங்களுக்கு தண்ணீர் கொடுங்க! மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்
கிராம குளங்களுக்கு தண்ணீர் கொடுங்க! மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்
கிராம குளங்களுக்கு தண்ணீர் கொடுங்க! மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்
ADDED : அக் 29, 2025 11:48 PM

உடுமலை: வறண்டு காணப்படும் கிராமப்புற குளங்களுக்கு, பி.ஏ.பி., கால்வாய் வழியாக தண்ணீர் வழங்கினால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில், 110க்கும் அதிகமான குளம், குட்டைகள் உள்ளன. அப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமாக உள்ள இக்குளங்களுக்கு, பருவமழை காலத்தில் மட்டும் நீர் வரத்து இருக்கும்.
பி.ஏ.பி., பாசன காலத்தில் கிடைக்கும் உபரி நீரை, முன்பு குளங்களில் நிரப்புவது வழக்கம். மழைக்காலங்களில், சாகுபடிக்கு தண்ணீர் தேவை குறைவாக இருக்கும் போதும், விவசாயிகள் ஒருங்கிணைந்து, தங்களுக்கு உரிய பாசன நீரை குளங்களுக்கு திருப்புவார்கள்.
இதனால், குளங்களில் பல மாதங்களுக்கு தண்ணீர் தேங்கி நிற்கும்; நிலத்தடி நீர்மட்டம் குறையாது. வறட்சி காலங்களில், அரசு உத்தரவுப்படி கிராம குளங்களுக்கு தண்ணீர் வழங்கும் நடைமுறையும் இருந்தது.
தற்போது பல்வேறு காரணங்களால், அனைத்து குளங்களுக்கும் பி.ஏ.பி., கால்வாயில் இருந்து தண்ணீர் திறப்பதில்லை. இதனால், பருவமழைக்கு பிறகு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயிகள் பாதிக்கின்றனர்.
இரு வட்டார விவசாயிகள் கூறியதாவது: திருமூர்த்தி அணை நீர்மட்டம் திருப்திகரமாக உள்ளது; பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு பிரதான மற்றும் இதர கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பருவமழையும் பரவலாக பெய்து வருகிறது. இத்தருணத்தில், கிராம குளங்களுக்கு பி.ஏ.பி., கால்வாய் வாயிலாக தண்ணீர் வழங்கினால், பல ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு ஆதாரமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படாது. தற்போது பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து குளங்களிலும் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பியுள்ளோம். இவ்வாறு, தெரிவித்தனர்.

