ADDED : மார் 23, 2026 10:07 PM
பொங்கலுார்:பொங்கலுார் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் உரக்கூடம், குப்பை குழி உள்ளது.
அப்பகுதியில், ஊராட்சி சார்பில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பையை கொட்டுகின்றனர். கோழிக்கழிவு, மீன் கழிவு உள்ளிட்டவையும் சேர்ந்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது என அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நேற்று குப்பை கொட்ட வந்த தூய்மை பணியாளர்களை தடுத்து நிறுத்தினர். மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் உரக்கூடம் என சொல்லிவிட்டு அதன் அருகிலேயே மக்காத குப்பையை கொட்டுவதா என வாக்குவாதம் செய்தனர். இதனால் குப்பை கொட்ட வழி இன்றி ஊராட்சி நிர்வாகம் தவித்து வருகிறது.
ஊராட்சி செயலாளர் செந்தில் குமார் கூறுகையில், ''இரண்டு நாட்களில் அங்கு இருக்கும் குப்பைகளை அகற்றி விடுவோம்,'' என்றார்.
