/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துணை மின் நிலையத்துக்கு மக்களிடம் கருத்து கேட்பு
/
துணை மின் நிலையத்துக்கு மக்களிடம் கருத்து கேட்பு
ADDED : நவ 17, 2024 10:05 PM
உடுமலை; உடுமலை அருகேயுள்ள, கொங்கல் நகரத்தில் துணை மின் நிலையம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, பொதுமக்கள் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மின்சார தேவை அத்தியாவசியமாக உள்ளது. சீராக மின்சாரம் வழங்கும் வகையில், துணைமின் நிலையங்கள் மின்வாரியம் சார்பில் அமைக்கப்படுகின்றன. இந்நிலையில், உடுமலை அருகே கொங்கல்நகரத்தில் துணை மின்நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக, பொதுமக்களின் ஆட்சேபனை தெரிவிக்க மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் தொடரமைப்பு கழக, மேற்பார்வை பொறியாளர் பரமேசுவரன் அறிக்கை:
உடுமலை அருகேயுள்ள, கொங்கல் நகரத்தில், க.ச.,எண், 332,333, மற்றும் 334/1 ஏ ஆகிய எண்களில் அமைந்துள்ள, கோவை லட்சுமி மெஷினரி ஒர்க்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான, 15.76 ஏக்கர் பரப்பளவுள்ள பூமியில், மின் தொடரமைப்பு கழகம் சார்பில், 230/110 கி.வோ., துணை மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து, பொதுமக்களுக்கு ஆட்சேபனை இருந்தால், 10 நாட்களுக்குள், மேற்பார்வை பொறியாளர், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், 182 டாக்டர் சுப்பராயன் ரோடு, டாடாபாத், கோவை என்ற முகவரியில் தெரிவிக்கலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் இது குறித்து தெரிவிக்கலாம்.