‘எங்களுக்கு தான் முன்னுரிமை’ பட்டா கேட்டு பொதுமக்கள் மனு
‘எங்களுக்கு தான் முன்னுரிமை’ பட்டா கேட்டு பொதுமக்கள் மனு
ADDED : செப் 25, 2026 09:12 PM
பல்லடம், செப். 26-– பல்லடம் தாலுகா, வடுகபாளையம் புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 13 ஏக்கர் பூமிதான நிலம் உள்ளது. இந்நிலத்தில் உள்ளூரில் வசிக்கும் தங்களுக்கு முன்னுரிமை அளித்து பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி, ஊராட்சியைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
அப்பகுதியினர் கூறுகையில், ‘பூமிதான நிலத்துக்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், நில உரிமை ஆவணம் வழங்க வேண்டும் என்றும் சிலர் தற்போது கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே நேரத்தில், உள்ளூரில் வசிக்கும் நாங்கள், குடியிருக்க இடமின்றி, பல ஆண்டுகளாக பட்டா கேட்டு மனு அளித்து வருகிறோம். எனவே, உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை அளித்து, அந்த இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
மனுக்களைப் பெற்றுக்கொண்ட தாசில்தார் சரவணன், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதற்கிடையே, கடந்த 1992-ம் ஆண்டு வடுகபாளையம் புதுார், பூமிதான நிலத்தில் 283 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாகக் கூறி, அதற்கான நில உரிமை ஆவணங்களை வழங்க வலியுறுத்தி, கைத்தறி நெசவாளர் குடும்பத்தினர் சில தினங்களுக்கு முன் தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதே இடத்தில் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மற்றொரு தரப்பினரும் நேற்று மனு அளித்துள்ளனர். இதனால், ஒரே பூமிதான நிலத்துக்கு இரு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
