கழிவுநீர் குட்டைகள் அதிகரிப்பு அவிநாசியில் பொதுமக்கள் அவதி
கழிவுநீர் குட்டைகள் அதிகரிப்பு அவிநாசியில் பொதுமக்கள் அவதி
UPDATED : நவ 26, 2026 09:05 PM
ADDED : நவ 26, 2026 09:05 PM

அவிநாசி: அவிநாசி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு வார்டுகளில் போதிய சாக்கடை வடிகால் வசதி இல்லாததால், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
நகராட்சியின், 18-வது வார்டு கைகாட்டிபுதுார் – - அவிநாசிலிங்கம்பாளையம் வீதியில், 27 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் வடிகால் அமைக்க கடந்த ஜன. மாதம் பூமி பூஜை நடைபெற்றது. ஆனால், 11 மாதமாகியும் பணிகள் இன்னும் துவங்கவில்லை. ரவுண்டானா பகுதியில் மழைநீர் வடிகால் இல்லாததால், மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் தேங்குகிறது.
இதுதவிர,ல14-வது வார்டு நாராசா வீதி நுழைவுபகுதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால் பல மாதங்களாக கழிவுநீர் குப்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. 9-வது வார்டு பாரதிதாசன் வீதி –- காமராஜர் வீதி சந்திப்பில் குறுகிய சாக்கடை கால்வாயால் 300-க்கும் மேற்பட்ட வீடுகளின் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. மேலும், பழுதடைந்த கால்வாய்களால் கழிவுநீர் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘அவிநாசி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டும் அடிப்படை வசதிகள் போதிய அளவில் மேம்படுத்தப்படவில்லை. எனவே, அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்துவதுடன், நிலுவையில் உள்ள வடிகால் பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
