/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
/
புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
ADDED : ஜூன் 29, 2025 12:13 AM
கொரோனா கோர தாண்டவமாடிய நேரத்தில், 'மை இந்தியா, மை ஸ்கூல்' என்ற அமைப்பு, சேவைப்பணியில் களமிறங்கியது. பொருளாதார வசதி குறைந்த மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் என பலருக்கும், ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை, அவர்கள் வீடு தேடிச் சென்று வழங்கினர்.
துாய்மைப்பணியாளர்கள் உட்பட அஞ்சலக பணியாளர்கள் என, மக்களோடு நேரடி தொடர்பில் பணியாற்றுபவர்களுக்கு மாஸ்க், கையுறை, சானிடைசர் உள்ளிட்டவற்றையும் வழங்கி, அவர்கள் உடல் ஆரோக்கியத்துக்கு உதவினர்.
சாலையோரம் வசிக்கும் அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு பாட புத்தகம், வாய்ப்பாடு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கியதோடு மட்டுமின்றி, பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை அடையாளம் கண்டு, மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்த்தனர்; 'டியூஷன்' வகுப்புக்கும் ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து, திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இந்த அமைப்பு செயல்படுகிறது.
திருப்பூரில், நடப்பு கல்வியாண்டில் பள்ளி செல்லும் ஏழை, மாணவ, மாணவியருக்கு புத்தக பை, நோட்டு, எழுதுபொருட்கள், ஜியாமன்டரி பெட்டி, சீருடை உள்ளிட்டவற்றை வழங்கினர். விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு சீருடை மற்றும் காலணி வழங்கப்பட்டது.
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகனகிருஷ்ணா, உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர், தேர்ந்தெடுக்கப்பட்ட, 34 மாணவ, மாணவியரின் வீடுகளுக்கே சென்று, கல்வி உபகரணங்களை வழங்கினர். உதவி தேவைப்படுவோர், 78249 - 37001 என்ற எண்ணுக்கு டயல் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.