ADDED : செப் 04, 2025 11:32 PM
சந்திரசேகர் (இன்சூரன்ஸ் ஏஜென்ட், பல்லடம்): ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலன் கருதி ஜி.எஸ்.டி., குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. காப்பீட்டு துறையில் மிக அற்புதமான சேமிப்பாக இது அமைந்துள்ளது.
குறிப்பாக, மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு, 18 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி., வரி முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உயிர்காக்கும் ஆக்சிஜன் மற்றும் பரிசோதனை கருவிகள் ஆகியவற்றுக்கு, 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஏழை, நடுத்தர மக்கள் பயனடைவர்.
ஈஸ்வரன் (கன்சல்டிங் உரிமையாளர், பல்லடம்): விவசாயம், விவசாயம் சார்ந்த உபகரணங்கள், உரம் மற்றும் சொட்டுநீர் கருவிகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது விவசாயத்தை மேம்படுத்தும். நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், இல்லத்தரசிகளின் சுமையை குறைக்க செய்யும் நடவடிக்கையாக இது உள்ளது.
மகேஷ் (பேராசிரியர், பல்லடம்): நம் தேசத்தின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில், சொட்டுநீர் பாசன கருவிகள், உரம் மற்றும் இயந்திரங்களுக்கான வரி விதிப்பு, 5 சதவீதமாக மாற்றப்பட்டு இருப்பது விவசாயத் தொழிலில் வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும். மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது, ஏழை குடும்பங்கள், மருத்துவ காப்பீடு மூலம் பயனடையை ஏதுவாக இருக்கும்.
நாகராஜ் (கோழிப்பண்ணை உரிமையாளர், பல்லடம்): அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி குறைப்பு நடவடிக்கையால், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பயன் தரக்கூடியதாக அமையும். இதேபோல், அனைத்து தொழில் துறையினருக்கும் ஏற்ற வகையிலும் இந்த வரி குறைப்பு உள்ளது. இதன் மூலம், மக்களுக்கு வாங்கும் திறன் அதிகரிப்பதுடன், உற்பத்தியும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
சுப்புலட்சுமி (இல்லத்தரசி, பல்லடம்): அத்தியாவசிய பொருட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட வரி குறைப்பு நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, ஆயுள் காப்பீடு மற்றும் உயிர் காக்கும் ஆக்சிஜன் மிக முக்கியமானவை. இந்தியாவின் உயிர்நாடியான விவசாயிகளுக்கு வரி குறைப்பு மனமகிழ்ச்சி தருகிறது. புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு வரி விதிக்காமல், முடிந்தவரை அவற்றுக்கு தடை விதித்தால் நன்றாக இருக்கும். வரி குறைப்பு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றம்.
கனகராஜ் (விவசாயி, பல்லடம்): ஜி.எஸ்.டி., வரி குறைப்பு மத்திய அரசின் மிகச்சிறந்த நடவடிக்கையாக கருதுகிறோம். அனைத்து மக்களுக்கும் பயன்படக்கூடியதாக இந்த மாற்றம் உள்ளது. மருத்துவம் மற்றும் விவசாய கருவிகளுக்கான வரி குறைப்பானது, விவசாயிகளுக்கு மட்டுமின்றி, நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது. பொதுமக்கள், தொழில்துறையினர் மற்றும் விவசாயிகளுக்கான இந்த மாற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது.
அருண் (வழக்கறிஞர், பல்லடம்): புதிய வரி மாற்றங்கள் மக்கள் நலனையும் தொழில் வளர்ச்சியையும் ஒருங்கிணைக்கும் வகையில் உள்ளது.
அன்றாட பயன்பாட்டில் உள்ள சில உணவுப் பொருட்கள் மற்றும் குடும்பத் தேவைகள், முன்பு, 12 சதவீதமாக இருந்தன. தற்போது, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கிறோம். இதனால் குடும்பங்களின் மாதாந்திர செலவுகள் குறையும். சிறு குறு தொழில்களுக்கான உற்பத்தி உபகரணங்களுக்கான வரி குறைத்திருப்பது ஏற்புடையது.
மக்கள் நலனையும், பொருளாதாரம் முன்னேற்றத்தையும் ஒரே கோணத்தில் சிந்தித்து எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு பாராட்டுதலுக்கு உரியது.