/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வங்கி பணத்தை உறுதிப்படுத்த 'க்யூ.ஆர்.,கோடு' ஸ்கேனிங் முறை
/
வங்கி பணத்தை உறுதிப்படுத்த 'க்யூ.ஆர்.,கோடு' ஸ்கேனிங் முறை
வங்கி பணத்தை உறுதிப்படுத்த 'க்யூ.ஆர்.,கோடு' ஸ்கேனிங் முறை
வங்கி பணத்தை உறுதிப்படுத்த 'க்யூ.ஆர்.,கோடு' ஸ்கேனிங் முறை
ADDED : மார் 15, 2024 02:00 AM
திருப்பூர்:வாகன தணிக்கையின்போது, வங்கி பணத்தை உறுதி செய்ய ஏதுவாக, லோக்சபா தேர்தலில், க்யூ.ஆர்., கோடு ஸ்கேனிங் முறையை தேர்தல் கமிஷன் செயல்படுத்த உள்ளது.
லோக்சபா தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டுவருகிறது. தேர்தல் விதிமீறல்களை கண்டறிந்து தடுப்பதற்காக, பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குவருகிறது. உரிய ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்குமேல் பணம் எடுத்துச்செல்ல கட்டுப்பாடு வருகிறது.
ஏ.டி.எம்., மையங்களில் வைப்பதற்காகவும், கருவூலங்களிலிருந்து வங்கிக்கும்; வங்கியிலிருந்து கருவூலத்துக்கும், பணம் அனுப்பப்படுவது வழக்கம். தேர்தல் விதிமுறை அமலாகும்போது, வங்கி பணம் எடுத்துச்செல்லும் வாகனங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.
க்யூ.ஆர்., கோடு ஸ்கேனிங் வாயிலாக, வங்கி பண விவரங்களை மிக சுலபமாக உறுதி செய்யும் வழிமுறையை தேர்தல் கமிஷன் நடைமுறைப்படுத்த உள்ளது. வங்கி சார்பில் பணம் அனுப்பப்படும்போது, முழு விவரங்களை உள்ளடக்கிய க்யூ.ஆர்., கோடுடன் கூடிய, ரசீது, வாகனங்களில் கொடுத்தனுப்பப்படும்.
தேர்தல் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழுவினர், தங்கள் மொபைல் போனில் உள்ள இ.எஸ்.எம்.எஸ்., செயலி மூலம், இந்த க்யூ.ஆர்., கோடை ஸ்கேன் செய்து, உண்மையில் வங்கி பணம்தானா என்பதை உறுதி செய்வர். எந்த வங்கியிலிருந்து, எந்த இடத்திலுள்ள கருவூலம் அல்லது ஏ.டி.எம்., மையத்துக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது, எவ்வளவு தொகை எடுத்துச் செல்லப்படுகிறது, வங்கி பணத்தை எடுத்துச்செல்லும் வாகனம், ஓட்டுனர் விவரம் அனைத்தும் க்யூ.ஆர்., கோடு ஸ்கேனிங் மூலம், கண நேரத்தில் தணிக்கை அதிகாரிகளுக்கு தெரிந்துவிடும்.
இதனால், வங்கி பணம் என்கிற போர்வையில், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக மோசடியாக பணம் எடுத்துச்செல்வது தடுக்கப்படும்.

