/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குவாரி, கிரஷர் நிறுவனங்கள் ஸ்டிரைக்; தினமும் ரூ.5 கோடி உற்பத்தி இழப்பு
/
குவாரி, கிரஷர் நிறுவனங்கள் ஸ்டிரைக்; தினமும் ரூ.5 கோடி உற்பத்தி இழப்பு
குவாரி, கிரஷர் நிறுவனங்கள் ஸ்டிரைக்; தினமும் ரூ.5 கோடி உற்பத்தி இழப்பு
குவாரி, கிரஷர் நிறுவனங்கள் ஸ்டிரைக்; தினமும் ரூ.5 கோடி உற்பத்தி இழப்பு
ADDED : ஏப் 16, 2025 10:59 PM

பல்லடம்; கல்குவாரி மற்றும் கிரஷர் நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்ட, 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி, கிரஷர் நிறுவனங்கள் மற்றும் எம்.சாண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம், நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் நிறுவனங்கள் முழுமையான வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
திருப்பூர் மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 130 கல்குவாரிகள், 190 கிரஷர் நிறுவனங்கள் வாயிலாக நாளொன்றுக்கு, 10 ஆயிரம் யூனிட்கள் போல்டர் கற்கள், ஜல்லிகள், எம்- சாண்ட், பி - சாண்ட் உற்பத்தி செய்யப்படுகின்றன. மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில், புதிய வரியான சிறு கனிமவள நில வரியை ரத்து செய்ய வேண்டும். கல்குவாரிகளுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என, 24 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த, 2023ல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி, தமிழக அரசுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.
இதற்கென ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என, தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. கல்குவாரிகளுக்கான விதிமுறைகள் தளர்த்தப்படாததால், அடுத்தடுத்து குவாரிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (நேற்று) முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளோம்.
தினமும், 5 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள், அகழ் இயந்திரங்கள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளதால், பல ஆயிரம் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம்.