ADDED : ஏப் 26, 2025 11:49 PM

பல்லடம்: சித்தம்பலம் நவகிரஹ கோட்டையில், ராகு கேது பெயர்ச்சி விழா நேற்று நடந்தது.
ராகு பகவான், மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான், கன்னி ராசியில் இருந்து சிம்மத்துக்கும் பெயர்ச்சி அடைந்தனர். இதையொட்டி, பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரஹ கோட்டையில், ராகு கேது பெயர்ச்சி விழா நேற்று நடந்தது.
காலை, 6.00 மணி முதல் இரவு, 7.00 மணி வரை, சிறப்பு வேள்வி பூஜைகள், அபிஷேக மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
முன்னதாக, கோவில் ஆண்டு விழாவை முன்னிட்டு, திருவிளக்கு வழிபாடு மற்றும் மலை வேண்டி வருண மூல மந்திர வேள்வி நடந்தது. தொடர்ந்து, ராகு கேது சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில், ராகு, கேது மற்றும் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பரிகார பூஜைகளை தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.