ADDED : ஜன 15, 2026 06:23 AM

திருப்பூர்: திருப்பூர் ரயில்வே கூட்ஸ்ெஷட் மேம்பாட்டு பணிகள் முடிவடைந்து திறக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 'கதிசக்தி' திட்டத்தின் கீழ், திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ்ெஷட் விரிவுபடுத்தும் பணி, 2025 ஆக. மாதம் 15 கோடியில் துவங்கியது.
நுாற்றாண்டு கால சரக்கு இறக்குமிடம், புக்கிங் அறை இடித்து அகற்றப்பட்டது; சரக்கு ரயில் நிற்குமிடம் திருப்பூரிலிருந்து வஞ்சிபாளையத்துக்கு மாற்றப்பட்டது.வெளி மாநிலத்தில் இருந்து தானியம், கோழித்தீவனம், சோயா புண்ணாக்கு, மக்காசோளம், சோளம் ஏற்றி வரும் சரக்கு ரயில்கள், திருப்பூரில் நிற்காமல், வஞ்சிபாளையத்தில் நிறுத்தப்பட்டது.
திருப்பூர் ரயில் நிலைய கூட்ஸ்ெஷட் பணி நான்கு மாதங்களாக நடந்தது. ஆங்கிலப் புத்தாண்டு நாளில் நிறைவுற்றது. மழை காலங்களில் சிரமங்களை தவிர்க்க, எட்டு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவுக்கு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் முதல் கூட்ஸ்ெஷட் செயல்பாடு துவங்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் இருந்து வந்த மக்காசோளம் ஏற்றி வந்த சரக்கு ரயில், புதிய கூட்ஸ்ெஷட்டில் நிறுத்தப்பட்டது; 50க்கும் அதிகமான லாரிகளில் சரக்குகள் எடுத்து செல்லப்பட்டது.
'தை பிறந்ததுவழி பிறந்தது' புதிய கூட்ஸ்ெஷட் திறக்கப்பட்டதால், சேலம், ஈரோடு, கோபி பல்வேறு பகுதியில் இருந்து திருப்பூருக்கு பணிக்கு வந்து, இங்கிருந்து வஞ்சிபாளையம் சென்று திரும்பிய ஊழியர்கள் இனி, திருப்பூரிலேயே பணிபுரியலாம்.முந்தைய பிளாட்பார்மில் ரயில்பெட்டிகள் உயரத்தை விட, லாரிகள் உயரம் அதிகம் என்பதால், சரக்குகளை ஏற்றி இறக்க சிரமங்கள் இருந்தது. தற்போது, ரயில் பெட்டிகள் உயரத்துக்கு தக்கவாறு, கான்கீரிட் போட்டு, கூட்ஸ்ெஷட் உயரம் குறைக்கப் பட்டுள்ளதால், சம நிலை ஏற்பட்டுள்ளது.
இனி, முதுகு ஓடிய, நீண்ட நெடிய ஏணி போன்ற படிக்கட்டு அமைப்பில் கலாசு தொழிலாளர்கள் ஏறி இறங்க வேண்டியதில்லை. 'தை பிறந்தது எங்களுக்கு வழி பிறந்துள்ளது' என தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
60 பெட்டிகளை நிறுத்தலாம் கடந்த 1900களில் நிர்மாணிக்கப்பட்ட பழைய கூட்ஸ்ெஷட், 20 - 35 சரக்கு ரயில் பெட்டிகள் நிற்கும் வகையில் இருந்தது. இதனால், குறிப்பிட்ட பெட்டிகளில் சரக்கு ஏற்றி, இறக்கிய பின், சரக்கு ரயிலை, அங்கும், இங்கும் நகர்த்த வேண்டிய சிரமங்கள் இருந்தன. தற்போது, புதிதாக விரிவுபடுத்தப்பட்ட கூட்ஸ்ெஷட், 50 - 60 பெட்டி நிற்கும் வகையில் பிளாட்பார்ம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகள், ஊழியர்களுக்கு பணிச்சுமை குறைந்துள்ளது.

