/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டு பணிகள் ஆமை வேகம் !: பாதுகாப்பற்ற சூழல்; பயணியர் தவிப்பு
/
ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டு பணிகள் ஆமை வேகம் !: பாதுகாப்பற்ற சூழல்; பயணியர் தவிப்பு
ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டு பணிகள் ஆமை வேகம் !: பாதுகாப்பற்ற சூழல்; பயணியர் தவிப்பு
ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டு பணிகள் ஆமை வேகம் !: பாதுகாப்பற்ற சூழல்; பயணியர் தவிப்பு
ADDED : பிப் 07, 2026 05:18 AM

திருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டு பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 22 கோடி ரூபாயில், 2023ம் ஆண்டு துவங்கியது. இரண்டரை ஆண்டுகளாக நடந்து வரும் பணியில், 60 சதவீதம் மட்டும் நிறைவுற்றுள்ளது. தொடர்ந்து பணிகள் நடந்தாலும், போதிய வேகமில்லை.
ரயில்வே ஸ்டேஷன் மேற்கு பகுதியில் அய்யப்பன் கோவில், சூசையாபுரம் பகுதியில் தடுப்புச்சுவர் இல்லை. ரயில்வே ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கு யார் வேண்டுமானாலும் வந்து செல்லும் நிலை உள்ளது. இரவில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இரண்டு பிளாட்பார்மிலும் எஸ்கலேட்டர் உள்ளது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் இயங்குவதில்லை.
டிக்கெட் மையம் நேரடியாக டிக்கெட் வழங்க இரண்டு 'கவுன்டர்'கள் உள்ளன. ''மொபைல் போன் செயலி வாயிலாக முன்பதிவில்லா டிக்கெட் பெறும் வசதி உள்ளது. காத்திருக்காமல் டிக்கெட் 'வெண்டிங்' மெஷினில் பணம் செலுத்தி, டிக்கெட் பெற்றுக் கொள்ள முடியும்'' என்கின்றனர் அதிகாரிகள். ஆனால், இதை எல்லாம் பொருட்படுத்தாமல் இரவு நேரங்களில் நீண்ட வரிசையில், 50 - 100 பேர் காத்திருப்பது தொடர்கிறது.
ரயில் வந்து செல்வது குறித்த தகவல்களை தெரிவிக்க, முதல் பிளாட்பார்மில் மட்டுமே தகவல் மையம் உள்ளது. 2வது பிளாட்பார்மில் இல்லை. விபரம் கேட்டால், முதல் பிளாட்பார்மில் கேட்க சொல்கின்றனர். ரயில் வருவதற்குள் இந்த பிளாட்பார்மில் இருந்து மற்றொரு பிளாட்பார்ம் சென்று விவரம் அறிய பயணிகள் சிரமப்படுகின்றனர்.
கூடுதல் கழிப்பிடம் முதல் மற்றும் இரண்டாவது பிளாட்பார்மில் மேற்கு புறத்தில் மூன்று கழிப்பிடங்கள் உள்ளன. ஆனால், கிழக்கு புறம் கழிப்பிடம் இல்லை.
இதனால், ஈரோடு மார்க்கமாக செல்லும் ரயில்களின் முன்புற பெட்டியில் காத்திருப்பவர் கழிவறை தேடி பிளாட்பார்மில் நீண்ட துாரம் நடந்து வர வேண்டியுள்ளது. கூடுதல் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
மல்டிலெவல் பார்க்கிங் அவசியம் ரயில்வே ஸ்டேஷன் பார்க்கிங் இடம் ஒதுக்குவது பெரும் சவால். ஒருபுறம் நடந்து வரும் கட்டுமான பணிகள், மறுபுறம் அதிகரிக்கும் வாகனங்களால், விடுமுறை, விசேஷ நாட்களில் எங்கு திரும்பினாலும் டூவீலர் மயம். வாகன பெருக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், இரண்டாவது பிளாட்பார்மிலாவது 'மல்டி லெவல் பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும். கார்கள் நிறுத்த இடமுள்ளதே தவிர, நிழற்குடை கிடையாது. பார்க்கிங் கட்டணம் வசூலித்தாலும், வெயில், மழையில் தான் வாகனங்கள் நிறுத்த வேண்டும்.

