/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி வட்டாரத்தில் தட்டியெடுத்த மழை! வியக்க வைக்கும் வானிலை மாற்றம்
/
அவிநாசி வட்டாரத்தில் தட்டியெடுத்த மழை! வியக்க வைக்கும் வானிலை மாற்றம்
அவிநாசி வட்டாரத்தில் தட்டியெடுத்த மழை! வியக்க வைக்கும் வானிலை மாற்றம்
அவிநாசி வட்டாரத்தில் தட்டியெடுத்த மழை! வியக்க வைக்கும் வானிலை மாற்றம்
ADDED : அக் 21, 2025 10:56 PM

அவிநாசி: தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம், அவிநாசி அருகே புஞ்சை தாமரைக்குளம், பாப்பாங்குளம், மாரப்பம்பாளையம், நடுவச்சேரி, கருக்கன்காட்டுப்புதுார், சங்கமாங்குளம் உள்ளிட்ட இடங்களில், மிக கன மழை பெய்தது. பெருக்கெடுத்த மழைநீர், நடுவச்சேரி குளம் நிரம்பி ததும்ப செய்திருக்கிறது. இக்குளம், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழும் இணைக்கப்பட்டிருக்கிறது.
நடுவச்சேரி ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ''நடுவச்சேரி பகுதியில், கடந்த, 1972க்கு பின், தற்போது தான் மிக கனமழை பெய்துள்ளதாக, ஊராட்சியில் வசிக்கும் முதியோர் சிலர் கூறுகின்றனர். இதுவரை நடுவச்சேரி குளம், நிரம்பி பார்த்ததில்லை, தற்போதைய மழையில் நிரம்பி ததும்புகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு முனனெச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது,'' என்றனர்.
நீர்வளத்துறையினர் கூறுகையில்,''புஞ்சை தாமரைக்குளம், பாப்பாங்குளம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களில் பெய்த மிக கன மழை தான், வெள்ளம் பெருக்கெடுத்து, நடுவச்சேரி குளம் நிரம்பி வழிய காரணமாக இருந்திருக்கிறது.
நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள நடுவச்சேரி குளத்தில், மழைக்காலங்களில் பொதுவாக, 5 முதல், 10 சதவீதம் அளவுக்கு தான் நீர் நிரம்பியிருக்கும். தற்போதைய மழையில் வெள்ளம் பெருக்கெடுத்திருக்கிறது,'' என்றனர்.
மழையளவில் மாறுபாடு! அவிநாசி வட்டாரத்தில் பெய்யும் மழையை பொறுத்தவரை, அவிநாசி நகரப்பகுதியில் சில நேரங்களில் கனமழை பெய்யும். அதே நேரம், சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழைப் பொழிவு இருக்காது; சேவூரில் மழை பெய்யும் போது, அவிநாசியில் மழை இருக்காது; அவிநாசி - சேவூர் இடைப்பட்ட, 7 கி.மீ., இடைவெளியில் இந்த வானிலை மாற்றத்தை உணர முடியும் என்ற நிலையில், மழையளவை பொறுத்தவரை, அவிநாசி தாலுகா அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள மழைமானியில் பதிவாகும் மழையளவு தான் கணக்கிடப்படுகிறது.
எனவே, அவிநாசி மற்றும் சேவூர் என, தனித்தனியாக மழையளவை கணக்கிட்டு தெரியப்படுத்தினால், தான் பேரிடர் பாதிப்பு மற்றும் சாகுபடி முன்னேற்பாடுகளில் விவசாயிகள் கவனம் செலுத்த முடியும்.
வீட்டின் கூரை இடிந்தது அவிநாசி ஒன்றியம், நடுவச்சேரி அருகேயுள்ள சிலுவைபுரம் முதல் வீதியில் வசிப்பவர்கள் புஷ்பராணி மற்றும் அந்தோணிசாமி. நேற்று முன்தினம் பெய்த கன மழையால், இவர்கள் வசிக்கும் வீட்டின் மேல் கூரை நேற்று இடிந்து விழுந்தது. இதனால் வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமானது.
உடனடியாக வருவாய்த்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இடிந்த வீட்டை, கிராம நிர்வாக அலுவலர் உட்பட வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.