தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பெய்யென பெய்யாத மழை...: குழாய் முன் குடிநீருக்காக குடங்கள் தவம்: ஆகச்சிறந்த வழிகளை கையாள்வதே அறம்

பெய்யென பெய்யாத மழை...: குழாய் முன் குடிநீருக்காக குடங்கள் தவம்: ஆகச்சிறந்த வழிகளை கையாள்வதே அறம்

பெய்யென பெய்யாத மழை...: குழாய் முன் குடிநீருக்காக குடங்கள் தவம்: ஆகச்சிறந்த வழிகளை கையாள்வதே அறம்


UPDATED : மார் 22, 2026 03:22 PM

ADDED : மார் 22, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 22, 2026 03:22 PM ADDED : மார் 22, 2026 05:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நீரின்றி அமையாது உலகு' என்பது, திருவள்ளுவர் வாக்கு. அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசிய தேவையில் பிரதானமானது தண்ணீர். பருவம் தவறாத மழையால், நிரம்பி ததும்பும் நீர் நிலைகள், அவற்றை ஆதராமாக கொண்டு உருவாக்கப்படும் குடிநீர் திட்டங்களின் வாயிலாக தான், மக்களின் தாகம் தணிகிறது.

அதனடிப்படையில், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள பல கூட்டு குடிநீர் திட்டங்களின் வாயிலாக தான், திருப்பூர் நகரம், பூண்டி, அவிநாசி, அன்னுார் உள்ளிட்ட வழியோர கிராம மக்கள் நீர் பெறுகின்றனர். மாவட்டத்தின் பிற இடங்களிலும், ஆங்காங்கே உள்ள நீராதாரங்கள் வாயிலாக தான் அப்பகுதி மக்களின் நீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.



பருவம் கடந்தும், வான் மழை தவறினால், தண்ணீர் தட்டுப்பாடு தலைகாட்ட துவங்கும். அப்படியான ஒரு நிலை தான், தற்போது ஏற்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழைப்பொழிவு குறைந்ததால், பவானி ஆற்றுக்கான நீர்வரத்து சரிந்தது. இதனால், அன்னுார், அவிநாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட இடங்களில், நீர் வினியோகம் தடைபட்டிருக்கிறது. பொதுகுடிநீர் குழாய்களில் திறந்து விடப்படும் நீரை குடங்களில் நிரப்ப, நீண்ட வரிசையில் காத்திருந்து, மக்கள் நீரை எடுத்துச் செல்கின்றனர்.

சவாலை சமாளிக்க சிக்கல்---------------------

'நீரின் முக்கியத்துவம், நீரை பெறுவதில் உள்ள சிரமங்கள் களையப்பட வேண்டும்' என்பதை உணர்த்தும் வகையில் தான், ஆண்டுதோறும், மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டின் கருப்பொருள், 'நீர் மற்றும் பாலினம்' என்பது. அதாவது, தண்ணீர் பற்றாக்குறையால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், நீண்ட துாரம் சென்று நீர் சேகரித்து வரும் கடினமா சூழலை இது, உணர்த்துகிறது. நகரப்பகுதியில், தினசரி ஒருவருக்கு, 135 லி. தண்ணீர், கிராமப்புறங்களில், தினசரி, 70 லி. வழங்க வேண்டும் என்பது விதி. இவற்றை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் பூர்த்தி செய்து கொடுக்கின்றனவா என்பது கேள்விக்குறி.

தீர்வு தான் என்ன?


நீர் மேலாண்மை வல்லுனர்கள் கூறியதாவது:

திருப்பூரில் நிலத்தடி நீர் மேம்படுத்தப்பட வேண்டும்; தொழிற்சாலையில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவது, முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஆங்காங்கே குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள கசிவால் பெருமளவு நீர் வீணாகிறது. அவற்றை சீரமைக்க வேண்டும். மழை சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். விவசாய பயன்பாட்டுக்கு சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட கட்டமைப்புகளை அதிகளவில் ஏற்படுத்த வேண்டும்.

அதிகளவில் குளம், குட்டைகளை துார்வாரி மராமத்து பணி செய்து, மழைநீர் தேங்கி நிற்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக, இதுதொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அரசுத்துறையினர் இவற்றை கண்காணித்து, நீர் மேலாண்மை செய்யாத நிறுவனங்கள், குடியிருப்புவாசிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவையனைத்தும் சாத்தியமானால், வருங்காலங்களில் வறட்சி பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அசுத்த நீரில் நீந்தலாமா?

தொழிற்சாலைகள் நிறைந்த திருப்பூரில், காவிரியாற்றின் கிளை ஆறான நொய்யல் மற்றும் நொய்யல் நதியின் கிளை ஆறாக நல்லாறு உள்ளன. ஒரு கால கட்டத்தில், தொழிற்சாலை சாய கழிவுநீர், நீர் நிலைகளில் சங்கமித்தன; நதிக்கரை ஓரமுள்ள குடியிருப்பு, ஓட்டல் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் ஆற்றில் கலக்க விடப்பட்டன.இது மிகப்பெரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில், சாயநீரை சுத்தகரித்து வெளியேற்றும் தொழில்நுட்பத்தை, சாய ஆலைகள் ஏற்படுத்தின.
அதேநேரம், வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவதும் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும், இது முழு பலனை தரவில்லை; நொய்யல் மற்றும் நல்லாறில், கழிவுநீர் வழிந்தோடிக் கொண்டு தான் இருக்கிறது. அதில், குழந்தைகள் குளித்து விளையாடி நோயை இலவசமாக வாங்கிக் கொள்வதும் ஆங்காங்கே நடக்கிறது.



பறவை மொழி கேளீர்!

கல் கவுதாரி உள்ளிட்ட சில பறவையினங்கள் நன்னீர் தேங்கி நிற்கும் நீர்நிலைகளில் தான் காண முடியும். அந்த அடிப்படையில், நல்லாற்று நீர் வழிந்தோடி செல்லும் நஞ்சராயன் பறவைகள் சரணாலய குளத்தில் தேங்கியுள்ள நீரில், கழிவுநீர் அதிகளவில் தேங்கியிருப்பதால், அங்கு இதுபோன்ற பறவைகளை பார்க்க முடிவதில்லை. மாறாக, ஓரளவு நன்னீர் நிரம்பியுள்ள மாணிக்காபுரம் குளத்தில் பார்க்க முடிகிறது.
'இதுபோன்ற மாற்றங்கள், சுற்றுச்சூழல் சமநிலைக்கு உகந்தது. எனவே, நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தவிர்த்து, நன்னீர் வழிந்தோடும் நிலையை உருவாக்கினால், திருப்பூரில் சுற்றுச்சூழல் மேம்படும்; இதன் மூலம் நீர், நிலம், காற்று மாசு குறைந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும்,' என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us