/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்டி நிரப்புவதால் மாயமாகும் மழைநீர் வடிகால்
/
குப்பை கொட்டி நிரப்புவதால் மாயமாகும் மழைநீர் வடிகால்
குப்பை கொட்டி நிரப்புவதால் மாயமாகும் மழைநீர் வடிகால்
குப்பை கொட்டி நிரப்புவதால் மாயமாகும் மழைநீர் வடிகால்
ADDED : ஆக 07, 2025 09:16 PM
உடுமலை; தேசிய நெடுஞ்சாலையின் மழைநீர் வடிகால் அமைப்புகள், குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மழைக்காலங்களில், போக்குவரத்து பாதிக்கும் அபாயமுள்ளது.
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை நகர எல்லையில், நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் குப்பை தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.
குறிப்பாக, நகர எல்லையிலுள்ள, ராஜவாய்க்கால் பள்ளம், ராகல்பாவி பிரிவு, முக்கோணம் பெரியகோட்டை பிரிவு ஆகிய இடங்களில், கட்டட கழிவுகள், அதிகளவு கொட்டப்படுகிறது. இதனால், ரோட்டின் இருபுறங்களிலும், வடிகால் அமைப்பு முற்றிலுமாக காணாமல் போயுள்ளது.
சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில், இறைச்சிக்கழிவுகள் பல இடங்களில் வீசியெறிப்படுகிறது. மழைக்காலங்களில், வெள்ள நீர் ரோட்டை கடந்து செல்லும் பாலங்களின் இருபுறங்களும் குப்பையால் மேடாகியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்பிரச்னைக்கு நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால், மழைக்காலங்களில், ரோடு பாதிக்கப்படுவதுடன், போக்குவரத்தும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
சில இடங்களில் மழை நீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுவதால், ரோடு சேதமடைகிறது. எனவே, உடனடியாக வடிகால்களை துார்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மரங்களுக்கும் ஆபத்து தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் நுாற்றுக்கணக்கான புளியமரங்கள் உள்ளன. இந்த மரங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. நுாற்றுக்கணக்கான மரங்கள் நோய்த்தாக்குதல் மற்றும் ஆணி அடித்தல் உள்ளிட்ட காரணங்களால், காய்ந்து வருகிறது.
மேலும், ரோட்டோரத்தில் கொட்டப்படும் குப்பைக்கு தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், அருகிலுள்ள மரங்களும் பாதிக்கப்பட்டு, கருகி விடுகின்றன.
பல ஆண்டுகள் செழித்து வளர்ந்த மரங்கள், படிப்படியாக மறைந்து வருவது இயற்கை ஆர்வலர்களை வேதனையடைய செய்துள்ளது. மரங்களை பாதுகாக்க, வடிகால்களில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
காய்ந்த மரங்களுக்கு மாற்றாக புதிதாக ரோட்டின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.