/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வறண்ட குளங்களில் மழை நீர் சேகரிப்பு; மழைக்கு முன் பணி துவங்குமா?
/
வறண்ட குளங்களில் மழை நீர் சேகரிப்பு; மழைக்கு முன் பணி துவங்குமா?
வறண்ட குளங்களில் மழை நீர் சேகரிப்பு; மழைக்கு முன் பணி துவங்குமா?
வறண்ட குளங்களில் மழை நீர் சேகரிப்பு; மழைக்கு முன் பணி துவங்குமா?
ADDED : செப் 03, 2025 11:04 PM

உடுமலை; வடகிழக்கு பருவமழைக்கு முன், கிராம குளங்களுக்கான நீர் வரத்து பாதைகளை துார்வாரி மழை நீரை சேகரிக்க ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், 74 குளங்கள் உள்ளன. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில், குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்கிறது.
நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இக்குளங்கள் உள்ளன. நீண்ட காலமாக, துார்வாரப்படாமல், குளங்களில், நீர் தேக்கும் கொள்ளளவு வெகுவாக குறைந்திருந்தது.
இந்நிலையில், கடந்த, 2019ல், 'ஜல் சக்தி அபியான்' திட்டத்தில், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 28 குளங்கள் துார்வாரப்பட்டது; விவசாயிகள் வண்டல் மண் அள்ளிக்கொள்ளும் திட்டத்திலும், சில குளங்களின் நீர்த்தேக்க கொள்ளளவு அதிகரித்துள்ளது.
ஆனால், குளங்களுக்கு கிராம குடியிருப்பு மற்றும் விளைநிலங்களில் இருந்து, மழைக்காலத்தில், தண்ணீர் வரும் வரத்து பாதைகள் பராமரிக்கப்படாமல் உள்ளது. பல நீர்வரத்து பாதைகள் புதர் மண்டி, மண்மேடாக மாறியுள்ளன.
இதனால், குளங்களுக்கு வரும் தண்ணீர் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துகின்றன. விரைவில், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், குளங்களின் நீர் வரத்து பாதைகளை சிறப்பு திட்டத்தின் கீழ் துார்வார வேண்டும்.
இதனால், குளங்களில், அதிகளவு தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. மழைக்காலத்தில், பி.ஏ.பி., கால்வாய்கள் வாயிலாக குளத்துக்கு தண்ணீர் வழங்கினாலும் பயனுள்ளதாக இருக்கும்.
இது குறித்து குடிமங்கலம் ஒன்றிய மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர்நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.