
பல்லடம் : பல்லடம் அடுத்த பணிக்கம்பட்டி கிராமத்தில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது.
போதிய பருவ மழை இல்லாததால், தண்ணீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். இதன் காரணமாக, பெண்கள், மழை வேண்டி, மழை சோறு எடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.
முன்னதாக, வீடு வீடாக சென்று, சோறு, உப்பு, புளி உள்ளிட்டவற்றை கேட்டு பெற்றனர். கும்மியாட்டம் ஆடியபடி மழை வேண்டி வருண பகவானை வேண்டினர் தொடர்ந்து, சேகரித்த மழை சோறை எடுத்துச் சென்று, விநாயகர் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இதையடுத்து, அம்மனுக்கு படைத்த பொங்கல் மற்றும் மழை சோறு ஆகியவற்றை கூட்டாக அமர்ந்து உண்டனர். தொடர்ந்து, கோவில் முன்பு பழைய அம்மிக்கல், உரல் ஆகியவற்றை வைத்து ஒப்பாரி பாட்டு பாடி, கும்மியடித்தனர். இதையடுத்து, அவற்றை, ஊர் எல்லையில் கொண்டு சென்று வீசிய பின், மழை வழிபாட்டை நிறைவு செய்தனர்.