/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழைக்காலம்... பள்ளி மாணவர்கள் படும்பாடு
/
மழைக்காலம்... பள்ளி மாணவர்கள் படும்பாடு
ADDED : அக் 18, 2024 06:37 AM

திருப்பூர் : மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக, அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளி, அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
* பெரும்பாலான பள்ளிகள் ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வேயப்பட்ட நிலையில் உள்ளன; மழைக்காலங்களில் வகுப்பறைக்குள் மழைநீர் வழிகிறது. அதை சுத்தம் செய்ய அரசுப்பள்ளிகளில் போதிய பணியாளர்கள் இல்லை. வகுப்பு நடத்தவும், மாணவர்கள் அமரவும் சிரமம் ஏற்படுகிறது.
* பல பள்ளிகளின் முகப்பில் உள்ள மைதானங்களில், மழைநீர் தேங்கி நிற்கிறது; அந்த மைதானத்தை கடந்துதான், மாணவர்கள் வகுப்பறை மற்றும் கழிப்பறைக்கு செல்ல வேண்டிய நிலையில், தேங்கியுள்ள மழைநீருக்குள் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
* பள்ளி வகுப்பறைகளை சுற்றி புதர்மண்டிக் கிடப்பதால் பல்வேறு விஷ ஜந்துகள் வகுப்பறைக்குள் நுழைந்து விடுகின்றன. மரக்கிளைகளையொட்டி, மின்கம்பிகள் செல்லும் நிலையில், மழை, காற்றுக்கு மரக்கிளைகள், மின் கம்பிகள் மீது விழும் நிலையில், விபரீதம் தவிர்க்க முடியாததாகி விடும்.
* மழைக்காலம் என்பதால் மாணவ, மாணவியர் பலர், சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைக்கு ஆளாகின்றனர். எனவே, பள்ளிகள் தோறும் மருத்துவக்குழுவினர் காய்ச்சல் பரிசோதனை செய்வதும் அவசியம். கொசு மருந்து தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் தெளிப்பது போன்ற பணிகளில் உள்ளாட்சி நிர்வாகங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.மழைக்கால பேரிடர் மேலாண்மையில் கவனம் செலுத்தும் மாவட்ட கலெக்டர், பிரத்யேக குழு அமைத்து, பள்ளிகள் தோறும் கள ஆய்வு மேற்கொண்டு, அங்கு நிலவும் பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பு.