/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
என்றும் நீதி காட்டும் நுாலாக ராமாயணம்! ஆன்மிக விழாவில் பேச்சு
/
என்றும் நீதி காட்டும் நுாலாக ராமாயணம்! ஆன்மிக விழாவில் பேச்சு
என்றும் நீதி காட்டும் நுாலாக ராமாயணம்! ஆன்மிக விழாவில் பேச்சு
என்றும் நீதி காட்டும் நுாலாக ராமாயணம்! ஆன்மிக விழாவில் பேச்சு
ADDED : அக் 13, 2024 10:16 PM

உடுமலை : ''மனதுக்கும் இதம் தரும் ராமாயணம், பல யுகங்கள் கடந்தும் இன்னும் நீதி காட்டும் நுாலாக விளங்குகிறது,'' என குரு சுபாஷ்சந்திரபோஸ் காமாட்சியம்மன் கோவிலில் சொற்பொழிவாற்றினார்.
உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரியையொட்டி, ராமாயண தொடர் சொற்பொழிவை குரு சுபாஷ்சந்திரபோஸ் நடத்தினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ராமாயணம் எனும் சொல்லுக்கு, ராமன் காட்டும் பாதை என்று பொருள். பல யுகங்கள் கடந்தும், இன்னும் புதிதாக நீதி காட்டும் நுாலாக ராமாயணம் விளங்குகிறது.
பக்திக்கும், ஞானத்திற்கும், வாழ்விற்கும் தேர்ந்த விடை தருவது ராமாயணம். கம்பனின் கவித்திறமை தமிழன்னைக்கு பெரும் பேராகும்.
குழந்தை பேறு வேண்டுவோர் பாலகாண்டத்தையும், துன்பம் தீர சுந்தர காண்டத்தையும் மற்றும் திருமணம் நடைபெற, பதவி பெற என அனைத்து வாழ்வியல் தேவைகளுக்கும் ராமாயணம் பாராயணம் செய்து கிடைக்கப்பெறுகின்றனர்.
ஆன்மிக சிந்தனை உடையோர், கோவில்களில் இது போன்ற சொற்பொழிவுகளை நிகழ்த்துவது மிக அவசியம். நவீன மயமான காலத்தில் ராமாயணம் மனதுக்கு இதம் தரவல்லது.
ராமாயணத்தை மையமாக வைத்து சொற்பொழிவு, தெருக்கூத்து, வழக்காடு மன்றம், பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பாரதம் முழுவதும் ராமாயண கதாபாத்திரங்கள் நிலைத்திருக்கின்றன.
நமக்கு பக்கத்தில் இருக்கிற பல ஊர்களின் பெயர்கள், ராமாயணத்தை தழுவி இருக்கிறது. அனுமந்தராயபட்டணம், ராவணாபுரம், தாடக நாச்சிமலை, ஐவர்மலை என்ற பெயர்கள் நமது ஊருக்கு பக்கத்திலேயே இருக்கின்றன.
நல்லோர் இணக்கம், சத்சங்கம் உண்டானால், அவன் நல்ல வாழ்வு அமையப் பெறுவான். ராமன் ஏன் ஏகபக்தனி விரதன் என கொண்டாடப்படுகின்றான் என்றால், அவன் வாழ்ந்த காலத்தில், ஒருவனுக்கு ஒருத்தி என்கின்ற கோட்பாடு இல்லை.
ராமனின் தந்தை தசரதனுக்கு ஏராளமான மனைவிகள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. ஆகையால் தான் வரையறையற்ற காலத்தில், நெறி நிலையோடு வாழ்ந்ததால் ராமர் என்றும் புகழப்படுகின்றார்.
இவ்வாறு, குரு சுபாஷ் சந்திரபோஸ் பேசினார்.