தாயுமானவர் திட்டம் புறக்கணிப்பு; ரேஷன் ஊழியர்கள் எச்சரிக்கை
தாயுமானவர் திட்டம் புறக்கணிப்பு; ரேஷன் ஊழியர்கள் எச்சரிக்கை
ADDED : ஜூன் 26, 2026 07:08 AM

திருப்பூர்: ரேஷன் கடைகளில் செயல்படுத்தப்படும் தாயுமானவர் திட்டத்தில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் பெரியசாமி, ராமு மற்றும் ஊழியர்கள் நேற்று கலெக்டர், டி.ஆர்.ஓ. மற்றும் கூட்டுறவு இணைப் பதிவாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: தாயுமானவர் திட்டம் கடும் பணிச்சுமையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. புளூடூத் முறையில் மட்டுமே விற்பனை செய்வதால், ஒரே ஊழியர் எடை போடவும் பில் போடவும் பெரும் சிரமப்படுகின்றனர்; தற்போது புதிய பயனாளிகளை இணைக்கச் சொல்வது பணிச்சுமையை மேலும் அதிகரிக்கும்.
அனைத்து கடைகளுக்கும் எடையாளர்களை நியமிக்க வேண்டும். பொருட்களைப் பாக்கெட் முறையில் தர வேண்டும். இத்திட்டத்தை 2 மற்றும் 3-வது சனிக்கிழமைகளில் மட்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் வரும் ஜூலை மாதம் முதல் தாயுமானவர் திட்டத்தைப் புறக்கணிப்போம்.
