/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆர்.சி., புக் ஒருவருக்கு: ஸ்கூட்டர் வேறொருவருக்கு... மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 'அசட்டை'
/
ஆர்.சி., புக் ஒருவருக்கு: ஸ்கூட்டர் வேறொருவருக்கு... மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 'அசட்டை'
ஆர்.சி., புக் ஒருவருக்கு: ஸ்கூட்டர் வேறொருவருக்கு... மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 'அசட்டை'
ஆர்.சி., புக் ஒருவருக்கு: ஸ்கூட்டர் வேறொருவருக்கு... மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 'அசட்டை'
ADDED : மே 20, 2025 12:47 AM

திருப்பூர் : பயனாளிக்கு ஆர்.சி., புக்கை மட்டும் வழங்கிவிட்டு, ஸ்கூட்டரே வேறு நபருக்கு வழங்கிய, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினரின் முறைகேடு, திருப்பூரில் மீண்டும் அம்பலமாகியுள்ளது.
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் வாயிலாக ஸ்கூட்டர் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. அரசு சம்பளம் பெறுவோர், 60 சதவீதத்துக்கும் குறைவாக உடல் பாதித்தோருக்கு ஸ்கூட்டர் வழங்குவது, ஒருவர் பெயரில் ஒதுக்கீடு செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்த ஸ்கூட்டரை, வேறு நபருக்கு வழங்குவது என, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்றுவரும் முறைகேடுகள், அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன.
தாராபுரத்தில் ரேஷன் ஊழியர், திருப்பூரில் சத்துணவு ஊழியருக்கு ஸ்கூட்டர் வழங்கிவிட்டு, விஷயம் வெளியே தெரிந்ததும் பறிமுதல் செய்தனர். 50 சதவீத உடல் பாதிப்பு பதிவு செய்த பெண்ணுக்கு ஸ்கூட்டர் பதிவு செய்து, ஆர்.சி., புக் வழங்கினர். மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஸ்கூட்டரை பெண்ணுக்கு வழங்காமல் ஷோரூமில் நிறுத்தி வைத்துள்ளனர்.
கருவம்பாளையத்தைசேர்ந்த, 26 வயது இளைஞர் பெயரில் பதிவு செய்த ஸ்கூட்டரை, நான்கு மாதமாக வழங்கவில்லை. 'தினமலர்' செய்தியால், தகுதியற்ற நபருக்கு வழங்கப்பட்டிருந்த அந்த ஸ்கூட்டரை பறிமுதல் செய்து, வெங்கேஸ்வரனுக்கு வழங்கினர்.
திருப்பூர் கே.வி.ஆர்., நகரை சேர்ந்த கனகராஜ், 65 என்பவருக்கு ஒதுக்கப்பட்ட இலவச ஸ்கூட்டர், 2024, டிச. 17ல், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், TN39DD8134 என்கிற எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரிஜினல் ஆர்.சி., புக் கனகராஜிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆறுமாதமாகியும் ஸ்கூட்டரை வழங்காமல், ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து, கனகராஜ் சார்பில், கார்த்திகேயன் என்பவர், கலெக்டர் ஆபீசில் நேற்று புகார் தெரிவித்தார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினரை அழைத்து விசாரித்தார். கனகராஜ் பெயரில் பதிவு செய்யப்ப்பட்ட ஸ்கூட்டர், உடுமலையை சேர்ந்த வேறு மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்ட முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது.
கலெக்டர் கிறிஸ்துராஜிடம் கேட்டபோது, 'மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கியதில் குளறுபடி தொடர்பாக விரிவான விசாரணை செய்து, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்