/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செய்தித்தாள் வாசியுங்கள்; கலெக்டர் அறிவுரை
/
செய்தித்தாள் வாசியுங்கள்; கலெக்டர் அறிவுரை
ADDED : அக் 12, 2025 12:16 AM

பல்லடம்:'சமூக ஊடகங்களை ஒதுக்கிவிட்டு, புத்தகம், செய்தித்தாள் வாசிக்க பழகிக் கொள்ள வேண்டும்,' என, பல்லடத்தில், பள்ளி மாணவியருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
பல்லடம் அரசு பெண்கள் பள்ளி மாணவியருடன் கலெக்டர் மனிஷ் நாரணவரே பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி, கிளை நுாலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் பேசியதாவது:
மாணவர்கள், படிப்புடன் கூடுதலாக ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு, யோகா, புத்தகம் வாசிப்பு உள்ளிட்டவை நம்மை உற்சாகமாக வைக்கும். புத்தக வாசிப்பால் படிப்புத் திறன் மேம்படும். பள்ளிப்படிப்பு என்பது மிக முக்கியமானது.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முறை மட்டுமே வரும். தற்போதைய படிப்பு தான் பின்நாளில் நமக்கு கை கொடுக்கும்.
மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் விதமாகவே, பள்ளிகளில் கலைத்திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு, நம்மை நாம் உயர்த்திக் கொள்ள வேண்டும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்களை மனப்பாடம் செய்யாமல், நன்கு புரிந்து படித்தால் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிப் புத்தகங்களில் இருந்துதான் போட்டி தேர்வுகளுக்கான கேள்விகள் கேட்கப்படுகின்றன.
சமூக ஊடகத்தின் தாக்கம் இன்று அதிகம் உள்ளதால், அவற்றை சற்று ஒதுக்கிவிட்டு புத்தகம், செய்தித்தாள் வாசிக்க பழகிக்கொள்ள வேண்டும். கடின உழைப்பு, விடா முயற்சியால் நமது நோக்கம் வெற்றி பெறும். ஒவ்வொருவருக்கும் ஒவ் வொரு தனித்திறமை உண்டு. அதனை வளர்த்துக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக, மாணவியர் தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு சந்தேகங்கள் குறித்தும் கலெக்டரிடம் கேட்டறிந்தனர். மாவட்ட நுாலகர் ராஜன், நுாலகர் சுல்தான், வட்டார வள மைய மேற்பார்வையாளர் அங்கையற்கண்ணி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.