ADDED : செப் 22, 2024 11:50 PM

உடுமலை : ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்கள் சிறப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அரசு பள்ளிகளில், குழந்தைகளுக்கு அடிப்படையான கற்றல் செயல்பாடுகளில் எழுதுதல், மற்றும் வாசித்தல் திறன்களும் உள்ளன.
துவக்கப்பள்ளி வகுப்புகள் முதல், இந்த திறன்களை மேம்படுத்தினால் மட்டுமே, அடுத்தடுத்த வகுப்புகளில் மாணவர்கள் கற்றல் திறன் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கான வாசிப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு முன்பு பல திட்டங்கள், போட்டிகளும் அறிவிக்கப்படும். தற்போது அவ்வாறு எதுவும் நடத்தப்படுவதில்லை. ஆசிரியர்கள் தங்களின் சுய முயற்சியால் மாணவர்களின் வாசிப்புத்திறனை ஊக்குவிப்பதற்கு முயற்சி செய்கின்றனர்.
இதன் அடிப்படையில் ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்கு மட்டுமின்றி, அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கான நாளிதழ் படிக்கும் பழக்கத்தையும், மாணவர்களுக்கு தொடர் செயல்பாடாக ஆசிரியர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அதேபோல், மதியம் உணவு இடைவேளை முடிந்த பின் மாணவர்கள், நுாலக புத்தகங்களை படித்து அதன் கருத்துகளையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் கூறியதாவது:
மாணவர்கள் நாள்தோறும் காலை இறைவணக்க கூட்டத்தில், 'தினமலர்' நாளிதழில், அன்றாட நிகழ்வுகள், விளையாட்டு செய்திகள், பள்ளிக்கல்வி துறை சார்ந்தது, வணிகம் என தொடர்ந்து படிக்கின்றனர்.
படிப்பதுடன் இல்லாமல் அது குறித்து கருத்துகளையும் கூறுகின்றனர். தேஜஸ் ரோட்டரி சார்பில் நுாலக புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. மதியம் அவற்றை பயன்படுத்துகின்றனர்.
குழந்தை பருவம் முதல் செய்திதாள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் நாளடைவில் அவர்களுக்கும் நாட்டு நடப்பு குறித்து அறிந்துகொள்வதற்கான ஆர்வம் ஏற்படும்.
அத்துடன் பாடப்புத்தகம் மட்டுமில்லாமல், பொது அறிவு சார்ந்த புத்தகங்களை படிப்பதற்கும் செய்தித்தாள் படிப்பது தான் முதல் கட்டம். மொபைல் போன் போன்ற டிஜிட்டல் பொருட்கள், பயன்பாட்டை குறைப்பதற்கு புத்தக வாசிப்பை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.