/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்: கலெக்டர்
/
செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்: கலெக்டர்
ADDED : நவ 01, 2025 11:24 PM
திருப்பூர்: திருப்பூரில், வாரந்தோறும் கல்லுாரி மாணவர்கள், சிறு தொழில் முனைவோர் உள்ளிட்ட தரப்பினருடன் கலெக்டர் நடத்தும் கலந்துரையாடல், 'காபி வித் கலெக்டர்' என்ற பெயரில் நடைபெறுகிறது.
இதன் ஆறாவது நிகழ்ச்சியாக, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி மாணவியருடன் நேற்று கலெக்டர் மணிஷ் நாரணவரே கலந்துரையாடல் நடத்தினார். இதில், 25 மாணவியர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், பங்கேற்ற கலெக்டர், பெண் கல்வியின் அவசியம், உயர்ந்த குறிக்கோள், சமூக ஊடகத்தின் தாக்கம், உடல் மற்றும் மனநலன் காப்பதன் முக்கியத்துவம், தனித்திறன் வளர்த்தல், விளையாட்டுகளில் பங்கேற்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
மேலும் மாணவியரின் லட்சியம், ஆர்வம் உள்ள துறைகள் குறித்தும் கேட்டறிந்த அவர், கல்லுாரி படிப்பு மட்டுமின்றி கூடுதலாக ஒரு துறையிலும் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, புத்தக வாசிப்பு, யோகா, விளையாட்டு, இசை, ஓவியம் என மனதுக்குப் பிடித்த பயனுள்ள விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். செய்தி தாள் வாசிப்பை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் நாட்டு நடப்பு, பொது அறிவு போன்றவை எளிதில் வசப்படும், என்றும் அறிவுறுத்தினார்.
மாணவியருக்கு நெகிழி பயன்பாடு விழிப்புணர்வுக்காக, மஞ்சப்பை மற்றும் விதைகள் அடங்கிய பேப்பர், பேனா மற்றும் பென்சில், குறிப்பேடு ஆகியன வழங்கப்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி, எல்.ஆர்.ஜி. கல்லுாரி பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

