/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தவில் வாசிப்பு; சிறுவனின் தாகம்
/
தவில் வாசிப்பு; சிறுவனின் தாகம்
ADDED : ஜூன் 20, 2025 11:46 PM

தவில் வாசிக்கும் கிராமப்புற மாணவர், பல பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
அவிநாசி ஒன்றியம், தெக்கலுாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருபவர் விஷ்ணுஸ்ரீ, 14. இவரது தந்தை சுப்பிரமணி, 52. தோட்டத்துக் கூலி வேலைக்கு சென்று வருகிறார். உப்பிலிபாளையம் ஊராட்சி, முருகம்பாளையம் ஏ.டி., காலனியில், இவர்களது குடும்பம் வசிக்கிறது.
விஷ்ணுஸ்ரீ குடும்பத்தில், தாத்தா பழனிசாமி தவில் இசைக்கலைஞராக உள்ளார். தாத்தா மீது கொண்ட அளவற்ற அன்பும், பாசம் காரணமாக அவருடன் பல்வேறு இசை கச்சேரிகளுக்கும், விசேஷங்களுக்கும் சிறுவயது முதல் விஷ்ணுஸ்ரீ உடன் செல்ல துவங்கினார். அதுவே தவில் கலையை கற்றுக் கொள்ளும் எண்ணத்தை இவர் மனதில் ஆழமாக பதித்தது. பத்து வயது முதல் தவில் கலையை முறையாக தாத்தாவிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.
பேரனின், தவில் கலை வாசிப்பு குறித்து, பழனிசாமி கூறியதாவது:
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே என்னுடன் அனைத்து விசேஷங்களுக்கும், கச்சேரிகளுக்கும் விஷ்ணுஸ்ரீயை அழைத்துச் செல்வேன். அதனால், தவில் வாசிப்பை கற்றுத்தர கேட்டு என்னிடம் அடிக்கடி அடம் பிடிக்க துவங்கினான். அவனது ஆர்வமும் தவில் கலையின் மேல் உள்ள பற்றும் என்னை மிக ஆச்சரியப்பட வைத்தது.
தற்போது திருமணம், காதணி விழா, கோவில் கும்பாபிஷேகம் என 75க்கும் மேற்பட்ட சுப விசேஷங்களுக்கு தவில் வாசித்து உள்ளான். பூபாளம், ஆதிதாளம், மனோகரம், தாமரைப் பூ கீர்த்தனை ஆகிய ராகங்கள் பிழை இல்லாமல் முறையாக வாசிக்க கற்றுள்ளான்.
தமிழக அரசின் கலைத் திருவிழாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து பரிசுகள் வென்றுள்ளார். விஷ்ணுஸ்ரீக்கு தவில் கலையின் மீது உள்ள தீராத தாகத்தால் தொடர்ந்து பல்வேறு ராக தாளங்களை கற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனது பேரனின் சாதனைக்கு, தெக்கலுார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், வகுப்பு ஆசிரியர்களும், பெரும்பங்கு ஆற்றி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.