தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஓட்டுப்பதிவுக்காக தயார் நிலை

 ஓட்டுப்பதிவுக்காக தயார் நிலை

 ஓட்டுப்பதிவுக்காக தயார் நிலை


ADDED : ஏப் 19, 2026 08:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 08:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: ஜனநாயக திருவிழாவின் முக்கிய நிகழ்வான, ஓட்டுப்பதிவு வரும் 23 ம் தேதி நடைபெறுகிறது. நுாறு சதவீத ஓட்டுப்பதிவு இலக்கை அடையவேண்டும் என்கிற இலக்குடன், ஓட்டுப்பதிவு பணிகளில் ஈடுபட, தேர்தல் பணியாளர்கள், போலீசார் உள்பட 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர்.

சட்டசபைத் தேர்தல் வரும் 23ல் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் முடித்துள்ளது. நுாறு சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்ட 16 ஆயிரம் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் மொத்தம் 116 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தொகுதி வாரியாக: திருப்பூர் தெற்கு (24), திருப்பூர் வடக்கு (15), பல்லடம் (15), காங்கயம் (15), அவிநாசி (14), மடத்துக்குளம் (13), உடுமலை (11), தாராபுரம் (9).

வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை முன்வைத்து, கோடை வெயிலையும் மிஞ்சும் வகையில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 1,112 மையங்களில் மொத்தம் 2,822 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுமையான கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கண்டறியப்பட்டுள்ள 129 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். தொகுதிக்கு ஒன்று வீதம் 8 'பிங்க்' நிற மகளிர் வாக்குச்சாவடிகள் பிரத்யேகமாக அழகுபடுத்தப்பட்டுத் தயார் செய்யப்பட்டுள்ளன.

----

வாக்கு இயந்திரங்கள் தயார்

வாக்குப்பதிவுப் பணிகளைச் சீராக நடத்த 8 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 307 மண்டல அலுவலர்கள், 10,170 வாக்குப்பதிவு அலுவலர்கள் எனப் பெரும் பட்டாளமே களமிறக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மூன்று கட்டப் பயிற்சிகள் அளித்து முடிக்கப்பட்டுள்ளன.

3,729 பேலட் யூனிட்கள், 3,383 கன்ட்ரோல் யூனிட்கள் மற்றும் 3,666 விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் 19,83,882 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் (10,26,453) ஆண்களை (9,57,453) விட அதிக எண்ணிக்கையில் உள்ளனர். திருநங்கைகள் 251 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களுக்கு வீடு தேடிச் சென்று தபால் வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

வரும் 23-ம் தேதி காலை 6:00 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 12 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

குண்டூசி முதல் மை வரை 80 வகையான பொருட்கள் அடங்கிய பைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவை 22-ம் தேதி வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us