/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சி எல்லைகளை மறு சீரமையுங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்
/
ஊராட்சி எல்லைகளை மறு சீரமையுங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்
ஊராட்சி எல்லைகளை மறு சீரமையுங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்
ஊராட்சி எல்லைகளை மறு சீரமையுங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 02, 2025 08:59 PM
உடுமலை; கிராமங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு, ஊராட்சிகளின் எல்லைகளை மறுவரை செய்து புதிய ஊராட்சிகளை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை ஒன்றியம் 38 ஊராட்சிகளைக்கொண்ட பெரிய ஒன்றியமாக உள்ளது. இதில், குறிப்பிட்ட ஊராட்சிகள், அதன் பரப்பளவில் பெரியதாகவும், அதிக கிராமங்களை கொண்டதாகவும் உள்ளது.
இதனால் மக்களுக்கான நலத்திட்டம் மற்றும் அரசு திட்டங்களில் பயன்பெறுவதற்கும், ஊராட்சி அலுவலகங்களுக்கும் தொலைதுாரம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.
ஒன்றியத்தில் ஆண்டியகவுண்டனுார், கண்ணம்மநாயக்கனுார், ஜல்லிபட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் அதிகமான குக்கிராமங்கள் உள்ளன.
ஆண்டியகவுண்டனுாரில் பாலமங்கலம், உரல்பட்டி, அமராவதி நகர், ஜக்கம்பாளையம், கிளுவன்காட்டூர், குட்டியகவுண்டனுார், பெரிசனம்பட்டி, பெரும்பள்ளம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
ஜல்லிபட்டி ஊராட்சியில் அம்மாபட்டி, சந்தனகருப்பனுார், தினைக்குளம், கோவிந்தாபுரம், லிங்கமாபுதுார், ஓனாக்கல்லுார், வெங்கிட்டாபுரம் ஆகிய குக்கிராமங்களும், கண்ணம்மநாயக்கனுார் ஊராட்சியில், ஜோதிபாளையம், கண்டியகவுண்டனுார், மலையாண்டிகவுண்டனுார், மருள்பட்டி, பள்ளிவலசு, பாலப்பம்பட்டி கிராமங்களும் உள்ளன.
பரப்பளவில் அதிக சுற்றளவு கொண்ட இந்த ஊராட்சிகளின் எல்லை இருப்பதால் பொதுமக்கள் எந்த தேவைகளுக்கும், அலுவலகம் வருவதற்கு சிரமப்படுகின்றனர்.
இதனால் இந்த ஊராட்சிகளின் எல்லையை மறுவரையறை செய்து புதிய ஊராட்சிகளை உருவாக்க வேண்டும்.
கிராம மக்கள் கூறுகையில், 'ஒரு சிறிய விண்ணப்பம் வழங்குவதற்கும் கடைக்கோடியிலிருந்து வர வேண்டியுள்ளது. தற்போதைய மக்கள் தொகை அடிப்படையிலும், கிராமங்களின் வசதிக்கேற்பவும், ஊராட்சிகளின் எல்லையை வரையறுத்து, குறிப்பிட்ட கிராமத்தை தலைமையாக கொண்டு கூடுதல் ஊராட்சியை ஏற்படுத்த வேண்டும். இதனால் ஊராட்சி நிர்வாகமும் எளிமையாகும்' என்றனர்.