ADDED : மார் 02, 2026 05:45 AM
திருப்பூர்: கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து அரசாணை வெளியிட வலியுறுத்தி, பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஊழியர் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு கடந்தாண்டு முதல் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். ஒரு வழியாக இதற்கான குழு அமைக்கப்பட்டது. அதன் பின் அக்குழு பல்வேறு கட்ட ஆலோசனை மற்றும் ஆய்வு மேற்கொண்டு, கருத்துகள் பெற்று, ஊதிய உயர்வுக்கான பரிந்துரையைச் சமர்ப்பித்தது.
இந்த நடவடிக்கை காரணமாக கூட்டுறவு சங்க ஊழியர்கள் தங்கள் போராட்டங்களை விலக்கிக் கொண்டனர். இருப்பினும் ஊதிய உயர்வுக்கான பரிந்துரையை ஏற்று அதற்கான அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. இது குறித்து கூட்டுறவு துறை சங்க ஊழியர்களின் 10க்கும் மேற்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.துறை செயலரைச் சந்தித்து இது குறித்து முறையிட்டனர். அதிகாரிகள் தரப்பில் இது குறித்து உறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதையடுத்து, மீண்டும் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஊதிய உயர்வுக்கான அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி, வரும் 6ம் தேதி, சென்னையில் உள்ள கூட்டுறவு துறை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இந்த போராட்டம் குறித்தும் துறை அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

