/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம குளங்களை உடனடியாக சீரமைக்க... தேவை நடவடிக்கை! நிலத்தடி நீர் மட்டம் சரிந்தும் அலட்சியம்
/
கிராம குளங்களை உடனடியாக சீரமைக்க... தேவை நடவடிக்கை! நிலத்தடி நீர் மட்டம் சரிந்தும் அலட்சியம்
கிராம குளங்களை உடனடியாக சீரமைக்க... தேவை நடவடிக்கை! நிலத்தடி நீர் மட்டம் சரிந்தும் அலட்சியம்
கிராம குளங்களை உடனடியாக சீரமைக்க... தேவை நடவடிக்கை! நிலத்தடி நீர் மட்டம் சரிந்தும் அலட்சியம்
ADDED : மே 30, 2024 11:56 PM

உடுமலை:கிராமங்களில் பல்வேறு திட்டங்களின் கீழ், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட, குளங்கள் மீண்டும் புதர் மண்டி பரிதாப நிலைக்கு மாறியுள்ளது குறித்து ஆய்வு செய்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கும் முன் பணிகளை மேற்கொள்வது அவசியமாகியுள்ளது.
கிராமங்களில் விவசாய பயன்பாட்டிற்கும், தண்ணீர் தேவைக்கும் முன்னோர்களால் குளம், குட்டைகள் அமைக்கப்பட்டன. அவை கிராமங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.
உடுமலை ஒன்றியத்திலுள்ள, 38 ஊராட்சிகளில், 118; குடிமங்கலம் ஒன்றியத்தில், 74 குளம், குட்டைகள் உள்ளன. இதில், பெரும்பாலான குளங்கள் ஒன்றிய நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமான இக்குளங்களுக்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலங்களில், அதிக நீர் வரத்து இருக்கும்.
இக்குளங்களின் மண் கரை சரிந்து, உபரி நீர் வெளியேறும் கலிங்கு மற்றும் நீர் வரத்து கால்வாய்கள் மண் மேடாக காணப்பட்டன.
இதையடுத்து, கடந்த, 2019ல், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், மாவட்டத்தில், முதற்கட்டமாக, 824 குளங்கள் துார்வார இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மத்திய அரசின் 'ஜல் சக்தி அபியான்' மற்றும் மாநில அரசின் குடிமராமத்து திட்டத்தில் குளங்கள் பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
குளங்களை துார்வாரி ஆழப்படுத்த, குடிமராமத்து திட்டத்தில், மாநில நிதியாக, ஒரு குளத்துக்கு, 1.25 லட்சம் ரூபாயும், நீர் தேங்கும் பகுதியில், சிறு குட்டை, குளிக்கும் பகுதி, நீர்வரத்து மற்றும் வெளியேறும் பகுதியில் கட்டமைப்புகளை ஏற்படுத்த, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், இரண்டு லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உடுமலை ஒன்றியத்தில், 76; குடிமங்கலம் ஒன்றியத்தில், 28 குளங்களில், இத்திட்டத்தின் கீழ் துார்வாரும் பணி நடந்தது.
மீண்டும் அதே நிலை
மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்ட குளங்களில், ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தின் தரப்பில், தொடர் கண்காணிப்பு செய்யவில்லை.
இதனால், குளங்களின் நீர்த்தேக்க பகுதி, புதர் மண்டி, சீமை கருவேல மரங்கள் முளைத்து காணப்படுகிறது. நீர் வரத்து கால்வாய்களும் மண் மேடாக மாறி வருகின்றன. பொதுமக்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனால், பருவமழை சீசனில், குளங்களுக்கு முழுமையான நீர்வரத்து கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, குளங்களில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் வாயிலாக, குறிப்பிட்ட இடைவெளியில், புதர்களை அகற்ற வேண்டும். நீர் வரத்து கால்வாய்களில் மண் மேடுகளை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும்.
எனவே, குளங்கள் முறையாக பாதுகாக்கப்படுவதுடன் வரும் தென்மேற்கு பருவமழை சீசனில், மழைநீரை முழுமையாக சேகரித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும்.
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பெய்யாத நிலையில், உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், நிலத்தடி நீர் மட்டம் முற்றிலுமாக சரிந்து விட்டது; தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி தென்னை மரங்களை காப்பாற்றும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலை மாற வேண்டுமானால், தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் முன் குளங்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது அவசியமாகியுள்ளது.
தமிழக அரசும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.