ADDED : பிப் 15, 2025 07:21 AM

திருப்பூர்; மாநகராட்சிக்கு வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாக கடைகள் நகரில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. இவற்றை வாடகைக்கு ஏலம் எடுத்த சில கடை உரிமையாளர்கள் பல மாதங்களாக முறையாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். இதனால், வாடகை நிலுவையில் உள்ள கடைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அவ்வகையில், வருவாய் பிரிவு உதவி கமிஷனர் கணேஷ்குமார் தலைமையில், வருவாய் பிரிவினர் வாடகை வசூலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதில் பல மாதங்களாக வாடகை நிலுவை வைத்திருந்த 3 கடைகள் மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நேற்று முன்தினம் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. நேற்று தென்னம்பாளையம் வாரச்சந்தை வளாகம் முன்புறமுள்ள வணிக வளாக கடைகளில், கடை எண்: 3 - 1.48 லட்சம் ரூபாய், கடை எண்: 5, 6 - 4.18 லட்சம், கடை எண்: 7, - 6.85 லட்சம் மற்றும் கடை எண்: 17 - 2.40 லட்சம் ரூபாய் வாடகை நிலுவை வைத்திருந்தது. இதனால், ஐந்து கடைகளையும் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரன், பூட்டி 'சீல்' வைத்தார்.