/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
60 மணி நேரத்தில் சீரமைப்பு; சூறாவளிக்கு சாய்ந்த 109 மின் கம்பங்கள்
/
60 மணி நேரத்தில் சீரமைப்பு; சூறாவளிக்கு சாய்ந்த 109 மின் கம்பங்கள்
60 மணி நேரத்தில் சீரமைப்பு; சூறாவளிக்கு சாய்ந்த 109 மின் கம்பங்கள்
60 மணி நேரத்தில் சீரமைப்பு; சூறாவளிக்கு சாய்ந்த 109 மின் கம்பங்கள்
ADDED : ஏப் 09, 2025 11:20 PM

திருப்பூர்; சூறாவளியுடன் பெய்த மழையால் சேதமான 109 மின்கம்பங்களையும், போர்க்கால அடிப்படையில் 60 மணி நேரத்தில் மின்வாரியம் மாற்றி, மின்வினியோகத்தை சீராக்கியுள்ளது.
கடந்த 6ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், திருப்பூர், அவிநாசி, பல்லடம் சுற்றுப்பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. மரங்கள் முறிந்து விழுந்தன; மரங்கள் காற்றில் துாக்கி வீசப்பட்டதால், மின்கம்பி மீது விழுந்து மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. சில பகுதிகளில், 18 மணி நேரம் வரை மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.
மின்வாரிய பணியாளர்கள் குழு களமிறக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில், மின்கம்பங்கள் விரைவாக மாற்றப்பட்டன. குறைவான எண்ணிக்கையில் கம்பம் பழுதான பீடர்களில் முதலில் பணிகளை செய்து, மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.
மங்கலம் சுற்றுப்பகுதியில், பல இடங்களுக்கு, நான்கு மணி நேரத்தில் மின்சாரம் கிடைத்தது. அதிக எண்ணிக்கையிலான கம்பங்கள் முறிந்த பீடர்களில், கூடுதல் 'பொக்லைன்' வரவழைக்கப்பட்டு, விரைவாக மின் கம்பங்கள் மாற்றப்பட்டன.திருப்பூர் மின் பகிர்மானத்தில், திருப்பூர் மற்றும் அவிநாசி கோட்டங்களில் மட்டும், 109 மின்கம்பங்கள் முறிந்து சேதமாகியிருந்தன. அதாவது, உயரழுத்த மின்சாரம் செல்லும் பாதையில், 35 கம்பங்கள்; தாழ்வழுத்த மின்சாரம் செல்லும் பாதையில், 74 கம்பங்களும் முறிந்து சேதமாகின.
மின்பகிர்மான அளவில், போதிய மின்கம்பங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததால், இரண்டு பகல், இரண்டு இரவு என, 60 மணி நேரத்தில், (6ம் தேதி இரவு 7:00 துவங்கி 9ம் தேதி காலை 9:00 மணி வரை) மின் பணியாளர் குழு, இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்துள்ளது.
திருப்பூர் கோட்ட செயற்பொறியாளர் (பொ) சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது,''மின்பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டனர். மேற்பார்வை பொறியாளரின் நேரடி கண்காணிப்பில், பணிகள் வேகமாக நடந்தது. மங்கலம், வஞ்சிபாளையம், அவிநாசி பகுதிகளில் சேதமான, 109 கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. இயன்றவரை, படிப்படியாக மின்வினியோகம் சீராக்கப்பட்டது. பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர்,'' என்றார்.
---
பல்லடத்தில்சூறைக்காற்றுக்கு சேதமடைந்த மின் கம்பத்தை அகழ் இயந்திரங்கள் உதவியுடன் மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள்.

