/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோடு சரி செய்ததாக தகவல்; புகார் தந்தவர் அதிர்ச்சி
/
ரோடு சரி செய்ததாக தகவல்; புகார் தந்தவர் அதிர்ச்சி
ADDED : செப் 25, 2024 12:17 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி, 52வது வார்டு, தென்னம்பாளையம், மாகாளியம்மன் கோவில் வீதி குறுகிய வீதி. இதனால் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மூலம் குழி தோண்டி, குழாய்கள் பதிக்கப்பட்டது.
அதன்பின், மண் போட்டு மூடிச்சென்றனர். அதன்மீது தற்போது செடிகள் முளைத்து விட்டன. கான்கிரீட் தளம் அமைத்து ரோடு சீரமைக்கப்படவில்லை. இது குறித்து அப்பகுதியினர், மாநகராட்சி புகார் மையத்துக்கு தகவல் அளித்தனர்.
இந்த புகார் உரிய உதவி பொறியாளர் சிவகுமாருக்கு நடவடிக்கை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ரோடு சரி செய்யப்படவில்லை. சரி செய்யப்பட்டு விட்டதாக தகவல் அனுப்பி உள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சஞ்சய் கூறியதாவது:
ரோடு பழுது சரி செய்ய அளித்த புகார் குறித்து மாநகராட்சியில் தொடர்பு கொண்டு விசாரித்தால், அது சரி செய்யப்பட்டு விட்டதாக பதில் அளித்தனர். அதன்பின் தற்போதைய நிலையை படம் பிடித்து மீண்டும் புகார் பிரிவுக்கு அனுப்பினோம்.
இதனால், அந்த புகாரை மீண்டும் புதுப்பித்து சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். சரி செய்யாத ரோட்டை சரி செய்து விட்டதாக பதில் அளித்த அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.