/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாட்டுப்பற்றை பறைசாற்றிய குடியரசு தின விழா! உற்சாகம் பொங்க பங்கேற்ற அதிகாரிகள், போலீசார், மாணவர்கள்
/
நாட்டுப்பற்றை பறைசாற்றிய குடியரசு தின விழா! உற்சாகம் பொங்க பங்கேற்ற அதிகாரிகள், போலீசார், மாணவர்கள்
நாட்டுப்பற்றை பறைசாற்றிய குடியரசு தின விழா! உற்சாகம் பொங்க பங்கேற்ற அதிகாரிகள், போலீசார், மாணவர்கள்
நாட்டுப்பற்றை பறைசாற்றிய குடியரசு தின விழா! உற்சாகம் பொங்க பங்கேற்ற அதிகாரிகள், போலீசார், மாணவர்கள்
ADDED : ஜன 27, 2026 07:17 AM

திருப்பூர்: ஓங்கி உயர்ந்த கம்பத்தில், தாயின் மணிக்கொடி பட்டொளி வீசி பறக்க, போலீசாரின் கம்பீர அணிவகுப்பு, மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன், திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை சார்பில், குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நம் நாட்டின், 77வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை சார்பில், குடியரசு தின விழா, சிக்கண்ணா கல்லுாரி வளாகத்திலுள்ள, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
காலை, 8:00 மணிக்கு துவங்கிய விழாவில், கலெக்டர் மனிஷ் நாரணவரே, தேசியக்கொடி ஏற்றினார். பேண்டு வாத்தியக்குழுவினர் தேசிய கீதம் இசைக்க, கொடிக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.
ஆயுதப்படை எஸ்.ஐ. மகேந்திரன், கமாண்டராக வாள் ஏந்தி வந்து, படையினரை பார்வையிட, கலெக்டருக்கு அழைப்பு விடுத்தார். மலர் அலங்காரம் செய்யப்பட்ட திறந்த ஜீப்பில், கலெக்டர் மற்றும் எஸ்.பி. அசோக் கிரீஷ் யாதவ் ஆகியோர், போலீஸ், தீயணைப்பு, ஊர்க்காவல், என்.சி.சி., படை பிரிவை பார்வையிட்டு, கொடிமேடை திரும்பினர்.
தொடர்ந்து, துப்பாக்கி ஏந்தியபடி, போலீசார் கம்பீர அணிவகுப்பு நடத்தினர். எஸ்.ஐ. ரஞ்சித்குமார் தலைமையில் முதல் படை, சிறப்பு எஸ்.ஐ. மனோகரன் தலைமையில் இரண்டாம் படை, கணேஷ்பாபு தலைமையில் மூன்றாம் படைப்பிரிவினர், ஊர் காவல் படை ரஞ்சித்குமார் தலைமையில் பேண்டு வாத்திய குழுவினர், சண்முகசுந்தரம் தலைமையில் ஊர்க்காவல் படை, நிலைய அலுவலர் கார்த்திகேசவன் தலைமையில் தீயணைப்பு துறையினர், வாசுதேவன் தலைமையில் டிராபிக் வார்டன் குழுவை தொடர்ந்து, என்.சி.சி., மாணவர்கள் அணிவகுத்துச்சென்றனர்.
சமாதானத்தை வலியுறுத்தும்வகையில் வெள்ளை புறாக்கள் மற்றும் மூவர்ண பலுான்கள் பறக்கவிடப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர்.
நலத்திட்ட உதவி குடியரசு தின விழாவின் ஒருபகுதியாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தொழிலாளர் உதவி ஆணையர், வேளாண், வேளாண் பொறியியல் துறை சார்பில், மொத்தம் 51 பயனாளிகளுக்கு, 3 கோடியே 36 லட்சத்து 5,116 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், டி.ஆர்.ஓ. கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜா, ஆர்.டி.ஓ. சிவபிரகாஷ் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் திரளாக பங்கேற்றனர்.
அசத்திய மாணவர்கள் குடியரசு தின விழாவின் நிறைவாக நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில், அரசு, தனியார் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்று தேசப் பற்று பாடல்களுக்குநடனமாடினர்.
அம்மாபாளையம் ராமகிருஷ்ண வித்யாலயா மாணவர்கள், 'வாழ்க நிரந்தரம்,' 15 வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், 'காற்றுக்கு வேலியில்லை: தடை போட யாருமில்லை,' என்ற பாடலுக்கும், டீ- பப்ளிக் பள்ளி மாணவர்கள் தேசபற்று பாடலுக்கும் நடனமாடினர்.
இடுவம்பாளையம் அய்யங்காளிபாளையம் அரசு பள்ளி மாணவர்கள், சிலம்பம், பரதம், கரகத்துடன் நடனமாடி அசத்தினர்.
தமிழாசிரியர்கள் சண்முக சுந்தரம், விஜயலட்சுமி, அஞ்சுகவதி ஆகியோர், குடியரசு தின நிகழ்வுகளை தொகுத்து வழங்கினர்.
நேற்று கார் மேகங்கள் சூழ்ந்து, துாறல் மழை பொழிய, ரம்மியமானசூழலில், விழா நடந்தது.

