மக்காச்சோள சாகுபடியில் நஷ்டம் நிவாரணம் வழங்க கோரிக்கை
மக்காச்சோள சாகுபடியில் நஷ்டம் நிவாரணம் வழங்க கோரிக்கை
ADDED : மார் 10, 2026 05:28 AM

உடுமலை: மானாவாரி மக்காச்சோள சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, மானாவாரியாக மக்காச்சோளம் சாகுபடி செய்தனர்.
நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், வழக்கத்தை விட இந்தாண்டு கூடுதல் பரப்பில், விவசாயிகள் இச்சாகுபடியை மேற்கொண்டனர். ஆனால், படைப்புழு தாக்குதல், சீதோஷ்ண நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், விளைச்சல் பாதியாக குறைந்தது.
ஏக்கருக்கு, நுாறு கிலோ கொண்ட, 30-40 மூட்டை வரையிலான விளைச்சல் இந்தாண்டு, 20 மூட்டையாக குறைந்து விட்டது. புழுத்தாக்குதலுக்கு இரண்டு மருந்து பயன்பாடு, அறுவடை செலவு பல மடங்கு அதிகரித்துள்ளதால், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
மானாவாரி விவசாயிகள், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சாகுபடி மேற்கொள்ள முடியும். இந்தாண்டு வாழ்வாதாரம் இழந்துள்ள விவசாயிகள், அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தியுள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: மக்காச்சோளம் சாகுபடியில், செலவு அதிகரித்து, விளைச்சல் சரிந்துள்ளது. அறுவடை துவங்கியதும், விலையும் குறைந்து விட்டது.
வருவாய் கிராமம் வாரியாக, மக்காச்சோள சாகுபடி பரப்பை கணக்கிட்டு, விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
