அலுவலர் பணி ஒதுக்கீட்டில் திருத்தம்: முந்தைய நிலை தொடர கோரிக்கை
அலுவலர் பணி ஒதுக்கீட்டில் திருத்தம்: முந்தைய நிலை தொடர கோரிக்கை
UPDATED : ஜூலை 05, 2026 10:11 PM
ADDED : ஜூலை 05, 2026 09:40 PM
திருப்பூர்: ஊரக வளர்ச்சித் துறையில், முந்தைய அரசு அலுவலர்களின் பணி ஒதுக்கீட்டில் செய்த திருத்தம், முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், அதை ரத்து செய்து, முந்தைய நிலையை தொடர புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தி.மு.க. ஆட்சியில், கடந்த ஜனவரி 27-ம் தேதி (அரசாணை எண்.14), ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் (ஊராட்சி) மற்றும் உதவி இயக்குனர் (தணிக்கை) ஆகிய தனித்தனி பதவிகளுக்குப் பதிலாக, உதவி இயக்குனர் (ஊராட்சி மற்றும் தணிக்கை) என்ற ஒருங்கிணைந்த பதவி உருவாக்கப்பட்டது. நிர்வாக வசதிக்காக, வளர்ச்சிப் பணிகளும், தணிக்கையும் ஒரே அதிகாரியால் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது, முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
இதுவரை வளர்ச்சிப் பணிகளையும், தணிக்கையையும் தனித்தனி அதிகாரிகள் கவனித்ததால், பணிகள் மற்றும் கணக்கு வழக்குகளில் உள்ள தவறு, முறைகேடுகளை எளிதில் கண்டறிய முடிந்தது. தற்போது வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அதே அதிகாரியே தணிக்கையும் செய்வதால், குறைகள் மற்றும் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வர வாய்ப்பு குறையும். இது, ஊழல், முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். புதிய அரசு இந்த திருத்தத்தை திரும்பப் பெற்று, முந்தைய நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
