/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை
/
கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 19, 2026 05:38 AM
உடுமலை: உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா அமைக்க, ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இதன் வழியாக, கோவை - மதுரை, திருவனந்தபுரம் - ராமேஸ்வரம், பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி, துாத்துக்குடிக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
உடுமலையிலிருந்து தென் மாவட்ட நகரங்களுக்கு செல்ல, தினமும் ஏராளமான மக்கள் ரயிலில் செல்கின்றனர்.
மேலும், இந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு, முன்பதிவில்லா டிக்கெட் எடுக்கவும், முன்பதிவு செய்யவும், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து, பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.
மேலும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ரயில்வே ஸ்டேஷனில் அதிக அளவில் பயணியர் திரள்கின்றனர். அங்கு கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே, பயணியரின் பாதுகாப்பு கருதியும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும், சமூக விரோத செயல்களை தடுக்கவும், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன் வாயிலாக, பயணியருக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

