/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை காவலர்களுக்கு உபகரணங்கள் முறையாக வழங்க கோரிக்கை
/
துாய்மை காவலர்களுக்கு உபகரணங்கள் முறையாக வழங்க கோரிக்கை
துாய்மை காவலர்களுக்கு உபகரணங்கள் முறையாக வழங்க கோரிக்கை
துாய்மை காவலர்களுக்கு உபகரணங்கள் முறையாக வழங்க கோரிக்கை
ADDED : ஆக 21, 2025 08:19 PM
உடுமலை; கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் துாய்மைக்காவலர்களுக்கு, தேவையான உபகரணங்களை குறிப்பிட்ட இடைவெளியில், வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், ஆயிரக்கணக்கான துாய்மைக்காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். முன்பு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்தது; தற்போது ஊராட்சிகளில் தனிக்கணக்கு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் வாயிலாக, சம்பளம் வழங்கப்படுகிறது.
இப்பணியாளர்களுக்கு குப்பை சேகரிப்பதற்கான உபகரணங்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. கிராமங்களில் பல்வேறு இடங்களில் கிடக்கும், உடைந்த மதுபாட்டில்கள், கண்ணாடி துகள்களை சேகரிக்கும் போது பணியாளர்கள் காயமடைகின்றனர்.
கிராம சாக்கடைகளை துார்வாரும் போது, கையுறை உள்ளிட்ட எவ்வித உபகரணங்களும் இல்லாமல், வெறும் கையில், பணிகளை மேற்கொள்கின்றனர். இதனால், பணியாளர்கள் காயமடைவதுடன், நோய்த்தாக்குதலுக்கும் ஆளாகும் நிலை உள்ளது.
வீடுதோறும் குப்பை சேகரிக்கச்செல்லும் போது, பணியாளர்களை அடையாளம் காணும் வகையில், அவர்களுக்கு சீருடை, தள்ளுவண்டி, கையுறை முன்பு, முறையாக வழங்கப்பட்டு வந்தது.
தற்போது, முறையான சீருடை கூட இல்லாமல், பணியாற்றுகின்றனர். பராமரிப்பில்லாத தள்ளுவண்டிகளை, தள்ள முடியாமல், திணறுகின்றனர்.
மக்கள் தொகைக்கு ஏற்ப பணியாளர்களும் நியமிக்கப்படாததால், கூடுதல் பணிச்சுமையுடன், பராமரிப்பில்லாத தள்ளுவண்டிகளில் குப்பையை சேகரிக்க சிரமப்படுகின்றனர்.
பெருந்தொற்று காலத்தில் மட்டும், சில ஊராட்சிகளில், துாய்மை பணியாளர்களுக்கு, சோப்பு மற்றும் இதர பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கிராம பொது சுகாதாரத்தில், முக்கிய பங்கு வகிக்கும், துாய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை, குறிப்பிட்ட இடைவெளியில் வழங்கி அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.