/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமர்ஜோதி கார்டன் செல்லும் வழி அடைப்பு; குடியிருப்போர் அவதி
/
அமர்ஜோதி கார்டன் செல்லும் வழி அடைப்பு; குடியிருப்போர் அவதி
அமர்ஜோதி கார்டன் செல்லும் வழி அடைப்பு; குடியிருப்போர் அவதி
அமர்ஜோதி கார்டன் செல்லும் வழி அடைப்பு; குடியிருப்போர் அவதி
ADDED : செப் 08, 2025 11:13 PM

திருப்பூர்; திருப்பூர், மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன் குடியிருப்பு பகுதியில் வழித்தடம் அடைக்கப்பட்டதால் அப்பகுதியினர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி, 42வது வார்டு, மங்கலம் ரோடு பகுதியில், பழக்குடோன் பஸ் ஸ்டாப் அருகே அமைந்துள்ளது அமர்ஜோதி கார்டன் குடியிருப்பு பகுதி.
ஒரு பிரதான ரோடும், 5 குறுக்கு வீதிகளும் கொண்ட இந்த மனைப் பிரிவு அமைந்து, 40 ஆண்டுக்கும் மேலாகிறது. மங்கலம் ரோட்டிலிருந்து செல்லும் பிரதான ரோடு, 40 அடி அகலத்தில், நொய்யல் கரை வரை சென்று சேருகிறது.
மனைப்பிரிவை அடுத்துள்ள இடத்தின் உரிமையாளர் அந்த இடத்தில் கேட் அமைத்து தனது இடத்துக்கு பாதுகாப்பு செய்துள்ளார். இதன் வழியாகத் தான் இப்பகுதியினர் நொய்யல் கரை ரோடுக்குச் சென்று வந்தனர். நேற்று முன்தினம் இட உரிமையாளர் கேட்டைப் பூட்டி விட்டு அமர்ஜோதி நகர் பகுதியினர் அந்த வழியைப் பயன்படுத்த முடியாமல் செய்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:
மனைப்பிரிவு உருவான போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறி நில உரிமையாளர் அந்த வழியை அடைத்து விட்டார். போலீசார் தலையிட்டு திறக்க வைத்தனர்.
தற்போது மீண்டும் இப்பிரச்னை முளைத்துள்ளது. எங்கள் குடியிருப்பு பகுதி வழித்தடத்தை அவர்கள் தரப்பு தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அவர் இடம் வழியாக உள்ள வழியை எங்களுக்கு விடாமல் அடைத்து விட்டார். இந்த வழித்தடத்தை அவர் அனுமதிக்காத காரணத்தால் எங்கள் பகுதியில் நீண்ட காலமாக கழிவுநீர் கால்வாய் ஏற்படுத்தாமல் உள்ளது.
வீடுகளுக்கு முன் 'சோக்பிட்' அமைத்து கழிவு நீரை தேக்கி வைத்துள்ளோம். பிரதான ரோட்டில் உள்ள கால்வாயிலும் டிஸ்போஸல் பாயின்ட் இல்லாமல் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கும், முதல்வர் தனிப்பிரிவுக்கும் புகார் அளிக்கப்பட்டது.
இருப்பினும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. கழிவு நீர் செல்லவும் வழியில்லை; வாகனங்கள் செல்லவும் வழியில்லை. திக்கற்ற நிலையில் தவிக்கிறோம். இதற்கான தீர்வு ஏற்படுத்த உரிய அதிகாரிகள் முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.