/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடியிருப்போர் குரல் பகுதி: அமைதி தவழும் அமராவதி நகர் விரிவு குடியிருப்பு கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டால் சிறப்பு
/
குடியிருப்போர் குரல் பகுதி: அமைதி தவழும் அமராவதி நகர் விரிவு குடியிருப்பு கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டால் சிறப்பு
குடியிருப்போர் குரல் பகுதி: அமைதி தவழும் அமராவதி நகர் விரிவு குடியிருப்பு கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டால் சிறப்பு
குடியிருப்போர் குரல் பகுதி: அமைதி தவழும் அமராவதி நகர் விரிவு குடியிருப்பு கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டால் சிறப்பு
ADDED : மே 24, 2025 05:57 AM

திருப்பூர் மாநகராட்சியின், 54வது வார்டு பகுதியில் வீரபாண்டி மற்றும் பலவஞ்சிபாளையம் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் அமைந்துள்ள அமராவதி நகர் விரிவு குடியிருப்பு. கடந்த 2004ம் ஆண்டு வாக்கில் இந்த குடியிருப்பு பகுதி உருவானது. வீரபாண்டி ஊராட்சியாக இருந்த போது, இங்கு மனைப்பிரிவுகள் பிரிக்கப்பட்டன. திருப்பூரைச் சேர்ந்தவர்களும், வெளி மாவட்டங்களிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்களும் சரியளவில் இங்கு வீடு கட்டி குடியேறியுள்ளனர்.
இப்பகுதியில் வசிப்போர் பலரும் தங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாக குடியிருப்போர் நலச்சங்கத்தை துவங்கினர். நலச்சங்க தலைவராக ரமேஷ், செயலாளராக பாபு, பொருளாளராக சிவகுமார், துணை தலைவராக மூர்த்தி மற்றும் கவுரவ ஆலோசகராக வக்கீல் பாரதிராஜா மற்றும் உறுப்பினர்கள் சங்கத்தை திறம்பட நடத்தி வருகின்றனர்.
மீட்கப்பட்ட
ஆக்கிரமிப்பு
--------------
அமராவதி நகர் விரிவு குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
எங்கள் குடியிருப்பு பகுதி ஆறு வீதிகளுடன் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 500 பேர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு ரிசர்வ் சைட் ஏறத்தாழ, 10 சென்ட் பரப்பளவில் குடியிருப்பின் தென் மேற்கு பகுதியில் உள்ளது. மூன்றாவது குடிநீர் திட்டத்தில் கட்டிய மேல்நிலைத் தொட்டி உள்ளது. நீண்ட காலமாக இது பயன்பாட்டில் இல்லை. இந்த இடத்தில் உள்ள கட்டடத்தில் அங்கன்வாடி மையம் முன்னர் செயல்பட்டது. அதற்கு வேறு கட்டடம் கட்டிய நிலையில், இதை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்தார்.
இந்த விவரம் தெரிய வந்து குடியிருப்போர் சங்கத்தின் விடாமுயற்சி காரணமாக இது ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது. தற்போது இங்கு பல தரப்பினரும் பயன்பெறும் வகையில் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. சங்க அலுவலகமாகவும் இதைப் பயன்படுத்தி வருகிறோம். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் நலச் சங்கம் சார்பில் கொடியேற்றி விழா நடத்தப்படுகிறது. மேலும் குடியிருப்பு பகுதியைச் சுற்றிலும் சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு, அவை தற்போது நல்ல விதமாக வளர்ந்து பயன் தருகிறது.
கண்காணிப்பு
கேமரா
------------
குடியிருப்புக்கான ரிசர்வ் சைட்டில், சம்பந்தமில்லாமல் வேறு பகுதியினரும் இதை பொது வழியாகப் பயன்படுத்துகின்றனர். வேறு குடியிருப்புகளுக்கு உரிய வழித்தடம் உள்ள நிலையிலும் உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பொது வழியாக மாறிவிட்டது. இப்பகுதிக்குச் சம்பந்தமில்லாத நபர்கள் நடமாட்டம் உள்ளது.
இந்த இடத்தை பாதுகாக்கும் முயற்சிக்கு மாநகராட்சி சார்பில் எந்த ஒத்துழைப்பும் இல்லை. இதனால், ரிசர்வ் சைட் ஒதுக்கப்பட்டதற்கான பயனே இல்லாத நிலை உள்ளது. இதனால், இடத்தை சீரமைத்து, பூங்கா, நுாலகம் போன்ற பொதுப்பயன்பாட்டுக்கு ஏற்ப மாற்ற தயாராக உள்ளோம். இப்பகுதிக்கு கண்காணிப்பு கேமரா அமைப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். விரைவில் இது அமைக்கும் திட்டம் உள்ளது.
கழிவுநீர் வடிகால்
தீராத பிரச்னை
---------------
எங்கள் குடியிருப்பிலுள்ள ரோடுகள், 25 அடி அகலத்தில் இருந்தாலும், இது வரை இங்கு கழிவு நீர் வடிகால் அமைக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக தொடர்ந்து மாநகராட்சியை வலியுறுத்தியும் இதற்கு எந்த தீர்வும் ஏற்படுத்தாமல் உள்ளது வேதனையாக உள்ளது. எங்கள் பகுதிக்கு வீரபாண்டி மற்றும் பலவஞ்சிபாளையம் ஆகிய இரு போஸ்ட் ஆபீஸ்கள் தபால் சேவை வழங்குகின்றன. இதனால், சில நேரங்களில் குழப்பம், கால தாமதம் ஏற்படுகிறது. ஏதாவது ஒரு போஸ்ட் ஆபீசின் கட்டுப்பாட்டில் எங்கள் குடியிருப்பு கொண்டு வர வேண்டும்.
வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டு தேவையான அளவு குடிநீர் கிடைக்கிறது. குப்பை அகற்றும் பணியில் துாய்மைப் பணியாளர்கள் தற்போது வீடு வீடாக வந்து பெற்றுச் செல்கின்றனர். துாய்மைப் பணிகள் கண்டுகொள்ளாமல் கிடப்பில் கிடந்தது. சங்கத்தின் அழுத்தம் காரணமாக தற்போது இப்பணி ஓரளவு முறையாக நடக்கிறது.
வீடுகளில் பயன்படுத்த தேவையான அளவு தண்ணீர் கிடைக்கிறது. ஆனால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அகற்றத் தான் வழியில்லாத நிலை உள்ளது. எல்லா வீடுகளிலும் முன்புறம் குழி ஏற்படுத்தி அதில் தான் கழிவு நீரை வெளியேற்றும் நிலை உள்ளது. பல நேரங்களில் இவை நிரம்பி வழிந்து, ரோட்டில் கழிவு நீர் சென்று பாயும் அவலம் ஏற்படுகிறது. கழிவு நீர் வடிகால் அமைப்பு இல்லை என்பதும் பெரும் சிரமமாகவும், அவதியாகவும் உள்ளது.பாதாள சாக்கடை திட்டத்தில் இப்பகுதியை இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.