/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சியுடன் இணைக்க கிராம சபைகளில் எதிர்ப்பு
/
மாநகராட்சியுடன் இணைக்க கிராம சபைகளில் எதிர்ப்பு
ADDED : அக் 03, 2024 04:09 AM

பல்லடம், : பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, அக்கணம்பாளையம் கிராமத்தில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது.
ஊராட்சித் தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். இதில், திருப்பூர் மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கிராம மக்கள் கூறியதாவது:
கரைப்புதுார் ஊராட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கரைப்புதுாரை மாநகராட்சியுடன் இணைப்பதால், அனைத்து அடிப்படை தேவைகளுக்காகவும் கிராம மக்கள் சிரமப்படுவர் திருப்பூர் மக்களின் அடிப்படை தேவைகளையே சரிவர நிறைவேற்ற முடியாத மாநகராட்சி நிர்வாகத்தால், புதிதாக இணைக்கப்படும் ஊராட்சிகளை எவ்வாறு பராமரிக்க முடியும்? வேலை உறுதி திட்டம் உட்பட பல்வேறு அரசு திட்டங்களும்கிராம மக்களுக்கு கிடைக்காது.
மக்களின் கருத்தை கேட்டுதான் ஊராட்சியை இணைக்க வேண்டும். கருத்து கேட்காமல் மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை வற்புறுத்தக் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக, கலெக்டர் தலைமையில், இதுதொடர்பாக, சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என, பொதுமக்கள் மனு அளித்ததை தொடர்ந்து, அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
பழங்கரை ஊராட்சி
அவிநாசி வட்டம், பழங்கரை ஊராட்சி, இந்திரா காலனியில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில், ஊராட்சித் தலைவர் கோமதி, முன்னாள் தலைவர் செந்தில், ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பழங்கரை ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை, மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக மாற்றும்போது அவிநாசியுடன் பழங்கரை ஊராட்சியை இணைக்கவும் அல்லது பழங்கரையை பேரூராட்சியாக மாற்றம் செய்யவும் வேண்டி பொதுமக்களின் ஒரு மனதான கோரிக்கையாக ஏற்று அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கணக்கம்பாளையம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கணக்கம்பாளையம் ஊராட்சி கிராம சபைக்கூட்டம், ஊராட்சி தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்ற வேண்டும். ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவிப்பது என்பதுஉட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.