ADDED : ஜன 01, 2024 12:16 AM
திருப்பூர்:திருப்பூர் சந்திராபுரத்தில் பெண் ஒருவர், பனியன் தொழிலாளியான கணவர் வேலைக்கு முறையாக செல்லாமல், மதுக்கடையில் அன்றாடம் மது அருந்துவதாக கூறி, ஆவேசமடைந்து மதுக்கடை மீது கல் வீசி தாக்கி 'தர்ணா' போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொழில்துறையினர் தரப்பில், ''மதுப்பழக்கத்துக்கு அடிமையாகாமல், சம்பள பணத்தை குடும்ப தேவைகளுக்கு தொழிலாளர் பயன்படுத்த வேண்டும்'' என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தெருவுக்கு தெரு மதுக்கடைகள் முளைத்துவிட்ட நிலையில், மதுப்பழக்கத்துக்கு அடிமையாகும் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து தொழில்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.
மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்; குடியிருப்பு பகுதி, மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என பல இடங்களில் பொதுமக்கள் ஆவேசமடைந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
'டாஸ்மாக்' அதிகாரிகளோ கூடுதலான கடைகளை திறப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆங்கிலப்புத்தாண்டிலாவது மக்களின் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும்.