/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழிக்கு பழியாக கொலை; 5 பேருக்கு வலை
/
பழிக்கு பழியாக கொலை; 5 பேருக்கு வலை
ADDED : ஜன 05, 2024 01:30 AM

திருப்பூர்;திருப்பூரில் தந்தையை கொன்ற தொழிலாளியை பழி தீர்க்கும் வகையில், கொடூரமாக வெட்டி கொன்ற உறவினர்கள், ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர், திரு.வி.க., நகர் 7வது வீதியில் வசிப்பவர் பாலமுருகன், 40. பனியன் தொழிலாளி. நேற்றுமுன்தினம் இரவு, தென்னம்பாளையம், நாவிதன் தோட்டம் முதல் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, தலையில் வெட்டியதுடன், முகத்தை சிதைத்து அவரை கொலை செய்து தப்பியது.
திருப்பூர் தெற்கு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இந்த கொடூர கொலை வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த நொண்டி முருகன், அவரது மகன் மணிகண்டன், சரவணன், கதிர்வேல், ஹரிஹரன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை ஏன்... எப்படி?
போலீசார் கூறியதாவது:
கொலை செய்யப்பட்ட பாலமுருகனின் பெரியப்பா மகன் ஆறுமுகம் என்பவரிடம், மணிகண்டன் என்பவர் வேலை பார்த்து வந்தார். மணிகண்டனுக்கும், பாலமுருகனின் தங்கைக்கும் பழக்கம் இருந்தது.
இதனையறிந்த பாலமுருகன், அவரை வேலையை விட்டு நிறுத்தவும், கண்டிக்காமல் இருந்தது குறித்தும் கேட்டார். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இப்பிரச்னை தொடர்பாக, 2022 ஜூலை 12ம் தேதி பாலமுருகனும், அவரது தம்பி முத்துவேலும் சேர்ந்து ஆறுமுகத்தை வெட்டி கொன்றனர். கொலை வழக்கு தொடர்பாக இருவரையும் பல்லடம் போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலைக்கு பழிவாங்கவே, ஆறுமுகத்தின் மகன் ஹரிகரன், உறவினர்கள் சிலரும் பாலமுருகனை கண்காணித்து வந்தனர். ஜாமினில் வெளியே வந்த பாலமுருகன் திருப்பூர் வருவதை அறிந்து பின்தொடர்ந்து வந்த, ஐந்து பேர், ஆறுமுகத்தின் இறப்புக்கு பழி தீர்க்கும் வகையில் கொடூரமாக வெட்டி கொன்றனர். தலைமறைவான, ஐந்து பேரையும் தேடி வருகிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.