ADDED : ஏப் 09, 2025 11:38 PM

பல்லடம்; பல்லடம் அடுத்த கரையான்புதுாரில், திருப்பூர் ரோட்டுடன், பல்லடம் -மங்கலம் ரோட்டை இணைக்கும் இணைப்புச் சாலை உள்ளது. இரண்டு மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் இணைப்புச் சாலை என்பதால், அதிகப்படியான வாகன ஓட்டிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர் ரோடு அல்லது மங்கலம் ரோட்டில் ஏதேனும் விபத்துகள், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், மாற்று வழித்தடமாக இந்த சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாகன போக்குவரத்து நிறைந்த இந்த சாலை, குண்டும் குழியுமாக, ஜல்லி கற்கள் பெயர்ந்தபடி காணப்பட்டது. அதிலும், திருப்பூர் ரோட்டில் இருந்து கரையான்புதூர் செல்லும் பிரிவில் ரோடு மிக மோசமான நிலையில் இருந்தது. மழை காலங்களில், குளம் உருவாகி வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு பின், 72 லட்சம் ரூபாய் செலவில் இந்த ரோடு நகராட்சி மூலம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சாலை பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.